31 ஜூலை, 2010

லண்டனில் வாடகை சைக்கிள் திட்டம்





லண்டனில் வெள்ளிக்கிழமை வாடகை சைக்கிள் திட்டத்தை தொடங்கி வைத்த அந்நகர மேயர் போரிஸ் ஜான்சன் (இடது), பார்க்ளேஸ் சைக்கிள் நிறுவனத் தலைவர் மார்க்கஸ்.
லண்டன், ஜூலை 30: பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

இத்திட்டத்தை லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இப்போது நகரில் எங்கு பார்த்தாலும் மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம்தான் உள்ளது. இதனால் சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. எனவே சூழலைக் காக்கும் வகையில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

÷லண்டனில் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு நகரின் பசுமையைக் காக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன் நகருக்குள் பயணம் செய்யும் மக்கள் இந்த வாடகை சைக்கிள்களைப் பயன்படுத்தி கொள்ள முடியும்.

÷ மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் முதல்கட்டமாக களம் இறக்கப்பட்டுள்ளன. லண்டன் நகரின் முக்கிய இடங்களில் 315 சிறப்பு வாடகை சைக்கிள் மையங்கள் உள்ளன. இந்த சைக்கிள்களைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். இதுவரை 12 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

÷சைக்கிளைப் பயன்படுத்த முதல் அரைமணி நேரம் வாடகை கிடையாது. அனைவரும் எளிதாக ஓட்டும் வகையில் 3 கியர்களுடன் இந்த சைக்கிள்களை பார்க்ளேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக