31 ஜூலை, 2010

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உட்பட 81 பேர் அவுஸ்திரேலியாவில் மீட்பு

கடலில் மூழ்கும் அபாயநிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அகதிகளுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களும் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தெரிவானதைத் தொடர்ந்து அங்கு சென்ற 150 ஆவது படகாக புதனன்று சென்ற படகு பதிவாகியுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு ஆட்கடத்தல்காரர்களும் குற்றவாளிகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் நான்கு பேரும் ஏனைய அகதிகளுடன் ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் "காப்பாற்றப்பட்ட கடற்பயணிகள்' என கருதப்படுபவரே தவிர, சட்டவிரோத குடியேறிகள் என கருதப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பல் மூழ்கும் நிலையில் இருந்ததாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அது மூழ்கிய நிலையில் இருக்கவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது ஆட்கடத்தல்காரர்களின் சூழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த படகில் மீட்கப்பட்ட அகதிகளில் அதிக அளவிலானவர்கள் இலங்கையர்கள் எனவும் பெரும்பாலும் அவர்கள் 18 தொடக்கம் 50 வயதுடைய ஆண்கள் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட், தமக்கு அகதிகளின் படகுகளை நிறுத்தும் எண்ணம் இல்லை எனவும், அவர்கள் தமது நாடுகளில் இருந்து வெளியேறாமல் தடுப்பதே தமது எண்ணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே பிராந்திய ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக