31 ஜூலை, 2010

வெளிநாடு சென்றவர்ளின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கக்கூடாது:த.தே.கூ

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறியவர்களின் விருப்பத்தை அறியாது, அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது. அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டு மே நீக்குவது குறித்த முடிவுக்கு செல்லவேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க தரப்பினரையும் தேர்தல்கள் ஆணையாளரையும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம். பாராளுமன்றத்திலும் இது குறித்து குரல் எழுப்புவோம். இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர் பதிவு மற்றும் திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது :

யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தொடர்பான பதிவுகளை செய்யும்போது கடந்த காலங்களில் போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்களின் பெயர்களை அவர்களின் விருப்பங்களை அறியாது வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம். வேறு மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்த நிலையிலேயே அதிகளவான மக்கள் சென்றுள்ளனர். எனவே உடனடியாக அவர்களின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கக்கூடாது.

அதாவது இவ்வாறு சென்றுள்ள மக்களின் விருப்பங்களை அறிந்துகொண்ட பின்னரே அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கவேண்டும். எனவே இவ்விடயம் குறித்து அடுத்தவாரமளவில் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து விரிவாக பேச்சு நடத்தவுள்ளோம். மேலும் அரசாங்கத்துடனும் இது குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதுடன் பாராளுமன்றத்திலும் இந்த விடயத்தை எழுப்பவுள்ளோம். நாங்கள் எமது தரப்பு நியாயங்களை முன்வைப்போம். இதேவேளை இதுகுறித்து அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவும் தயாராகவே இருக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக