20 ஜூன், 2010

சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தில் பயிர்ச் செய்கை உரமானியங்கள் வழங்க தீர்மானம்; காணிகள் வழங்கவும் ஏற்பாடு - பசில்






வட மாகாணத்திலுள்ள சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தின் போது பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரமானியங்களையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு, காணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஸி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று முன்தினம் கையளித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்:-

வட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை மாத்திரம் வழங்கியதுடன் அரசாங்கம் விட்டுவிடவில்லை. தற்போது அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதுடன், விவசாய, வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

படை வீரர்கள் வடக்கை விடுவித்ததன் மூலம் வடக்கும், தெற்கும் இணைக்கப் பட்டுள்ளன. உள்ளங்கள் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேச மக்களின் நலனைக் கருத்திற் கொண்டும் அரசாங்கம் மேலும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது.

இலங்கைக்கு மிக நீண்ட காலமாக எல்லா நிலைமைகளிலும் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு உதவ முன்வரும் பல நாடுகள் உதவிகளை வழங்குவதுடன், எம்மை கண்காணிக்கவும், எம்மீது அழுத்தம் கொடுக்கவும் முற்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் நின்றும் மாறுபட்ட கொள்கையைக் கொண்டது ஜப்பான். அது எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராது தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இதற்காக இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்பொழுது சுமுகமான சூழல் காணப்படுகின்றது. எனவே, அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி உரையாற்றுகையில்:-

வட மாகாண மக்களின் வாழ் வாதாரத்தையும் விவசாயத்துறையையும் மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம், தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்கும்.

நாங்கள் விவசாய உபகரணங்கள், இயந்திரங்களை இந்த மக்களுக்காக வழங்கி வருகின்றோம். விவ சாயத்துறையை மேம்படுத்தும் வகையில் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றார்.

விவசாயத்துறை மேம்பாட்டின் மூலமே அந்த நாட்டில் அபிவிருத்தி ஏற்படுகின்றது. விவசாயம் என்பது அபிவிருத்தித்துறைக்கான ஒரு மைல் கல்லாகும்.

இலங்கைக்கு நான் பல தடவைகள் விஜயம் செய்துள்ளேன். புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன். அவை பயனளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் தங்களது பாரிய அர்ப்பணிப்புக்களின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தற்போது சமாதான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜப்பான் தொடர்ந்தும் தமது ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்கும் என்றும் அகாஷி தெரிவித்தார்.

வசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, எம். பிக்களான சந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக