20 ஜூன், 2010

சீனக்கைதிகள் இலங்கையில் இருப்பதாக ஜெயலலிதா கூறுவது அதீத கற்பனை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பு





இலங்கையில் ஆயிரக்கணக்கான சீனக் கைதிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ள தாகவும் அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெவித்துள்ள கூற்றை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஜெயலலிதா கூறுவதைப் போன்று இலங்கையில் சீனக் கைதிகளோ அல்லது வேறு நாட்டின் கைதிகளோ இல்லையென்றும் தொழிலாளர்களே கடமையாற்றுகிறார்களென்றும், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் ‘வாரமஞ்சரி’க்குத் தெரிவித்தார்.

பல்வேறு செயற்றிட்டங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சீனப் பிரஜைகளுக்குக் குறுகிய காலம் மட்டுப்படுத்தப்பட்ட வீசா வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் வீசா காலம் முடிவடைந்ததும் நாட்டைவிட்டுச் சென்று விடுவார்களென்றும் அவ்வதிகாரி கூறினார்.

வெவ்வேறு காரணங்களின் பேரில் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் சட்ட ரீதியாகக் கைதிகளாக உள்ளதைத் தவிர வேறு நாடுகளின் கைதிகள் இலங்கையில் எந்த நிலையிலும் கிடையாதென்று வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார்.

ஆகவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதைப் போன்று சீனப் பிரஜைகள் இலங்கையில் பணியாற்றுவதால், இந்தியாவுக்கோ தமிழகத்திற்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாதென்று தெரிவித்த, அவ்வதிகாரி ஜெயலலிதா தெரிவித்திருக்கும் கூற்றை முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார்.

இலங்கையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உளவு பார்ப்பதற்காகவே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்று முன்தினம் (18) ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் சீனக் கைதிகள் பணியாற்றுவது இந்தியாவுக்கு விசேடமாக தென்னிந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலானது என்று குறிப் பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் தற்போது அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர், இந்தியா வுக்கும் சீனாவுக்கும் நட்புறவு நிலவிய 1960 களில் சீனா போர்த் தொடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக