"இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்' என, ஐ.நா., பொதுச் செயலரிடம் இலங்கை வலியுறுத்த உள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறியதாவது: ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூனைச் சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு வந்துள்ளேன். அவருடனான சந்திப்பின் போது இலங்கையில் நடக்கும் சீரமைப்பு மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் பற்றி எடுத்து கூறவுள்ளேன்.
குறிப்பாக, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று அவரிடம் வலியுறுத்தப்படும்.கடந்தாண்டு மே மாதம் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்தனவா என்பது குறித்து விசாரிக்க, இலங்கை அரசே ஒரு குழுவை அமைத்துள்ளது என்பதையும், ஐ.நா., சார்பில் தனியாக இது குறித்து விசாரிக்க வேண்டாம் என்றும் அவரிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு பெரிஸ் கூறினார்.
பெல்ஜியத்தைச் சேர்ந்த சர்வதேச நெருக்கடி நிலைக்குழு (ஐ.ஆர்.சி.,) சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், "இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, பெருமளவிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.நா., சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியான அடுத்த சில நாட்களில், மனித உரிமை மீறல் விசாரணை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக