23 பிப்ரவரி, 2010

தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை'



இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு


சரத் பொன்சேகா





இராணுவத்தினால்
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் மனைவி சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை, தொடர்ர்ந்து தடுத்து வைத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், அவரை இராணுவ நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த விளைகிறது.

ஆனால், தான் தற்போது இராணுவத்தில் இல்லாத சாதாரண பொதுமகன் என்பதால் தன்னை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்று சரத் பொன்சேகா எதிர்த்து வருகிறார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வடக்கிலும் வேட்பு மனுத் தாக்கல்



தனது சகாக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்
இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்தக் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா தலைமையிலான 9 வேட்பாளர்கள் வன்னியிலும், அக்கட்சியின் முக்கியஸ்தராகிய கந்தையா அருமைலிங்கம் தலைமையிலான 12 வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுகின்றார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக இன்று வவுனியாவுக்கு வருகை தந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமது கட்சியை நாட்டின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்தத் தேர்தலைப் பயன்படுத்தும் வகையிலேயே வடக்கு கிழக்கு மற்றும் பொலன்நறுவை ஆகிய இடங்களில் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய தாங்கள், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட போதிலும் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஜனசெத்த பெரமுன என்ற தென்னிலங்கை அரசியல் கட்சியும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்திருக்கின்றது. இன்று வரையில் 3 அரசியல் கட்சிகள் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக