23 பிப்ரவரி, 2010

மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய
பாடசாலையொன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்


மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் பதுளை மாவட்டம் பண்டாரவளைப் பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தப் பாடசாலையில் பத்தாம் தரத்தில் கல்வி பயில்கின்ற மாணவியொருவரே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிபரால் இதற்கு முன்னர் 11ம் தரத்தைச் சேர்ந்த மாணவியொருவம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மயக்கமருந்தை ஊசிமூலம் இந்த இரண்டு சிறுமியர்களுக்கும் ஏற்றி குறித்த அதிபர் தமது வீட்டில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 51வயதான குறித்த அதிபர் பண்டாரவளை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



அனுராதபுரம் மாவட்டத்தில் விசேட தேர்தல் பாதுகாப்புத் திட்டமொன்று  

அனுராதபுரம் மாவட்டத்தில் விசேட தேர்தல் பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட செயலர் எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைவிட இம்முறை கடுமையான பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நேற்று விசேட கூட்டமொன்று நடைபெற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாக்கெண்ணும் நிலைய பாதுகாப்பை உறுதி செய்யவென நுழைவாயில்களில் கண்காணிப்பு கமெரா பொருத்துவது குறித்து நேற்றைய கூட்டத்தின்போது ஆராயப்பட்டுள்ளது.

 

புளொட் அமைப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா)அணியும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றன.


புளொட் அமைப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா)அணியும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அணியின் சின்னமாகிய மெழுகுவர்த்தியிலும், வவுனியாவில் புளொட் அமைப்பின் சின்னமான நங்கூரத்த்திலும் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வன்னியில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்(பத்மநாபா) கட்சியின் பொதுச்செயலாளர் தியாகராஜா சிறீதரன் தலைமையிலும் வேட்புமனுக்கள் நாளையதினம் தாக்கல் செய்யப்படவுள்ளன. அம்பாறை, திருமலை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதனால் தமிழ்ப் பிரதிநிதித்துவமொன்று இல்லாமற் போகின்ற ஒருநிலையை உருவாக்கக் கூடாதென்பதில் மிகவும் அவதானமாகவே நடந்துகொள்ள வேண்டுமென்று கருதி அம்மாவட்டங்களில் போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொள்ள தீர்மானித்ததாக புளொட் தெரிவித்துள்ளது. இதேவேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் புளொட் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


இலங்கைக்கு செல்வதற்கு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சவூதி அரேபியா நீக்கியுள்ளது.

 

இலங்கைக்கு செல்வதற்கு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சவூதி அரேபியா நீக்கியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம்முதல் குறித்த பயண எச்சரிக்கையை சவூதிஅரேபிய அரசு விடுத்திருந்தது. இலங்கையின் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டே சவூதி அரசு இந்த பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. ரியாத்துக்கான இலங்கைத் தூதரகம் நிலைமைகளை விளக்கியதன் விளைவாக தற்போது இந்த பயண எச்சரிக்கையை சவூதி அரசாங்கம் தளர்த்தியுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிக எண்ணிக்கையிலான சவூதிஅரேபிய சுற்றுப்பயணிகளை எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு வெலிக்கடை கல்பொத்தவீத நாவல பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற இரட்டைக்கொலை


கொழும்பு வெலிக்கடை கல்பொத்தவீத நாவல பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்தின் சந்தேகநபரான உக்ரைன் பிரஜையும் அவரது மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்ற வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சந்தேகநபரையும் அவரது மனைவியையும் வெலிக்கடை பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 6.30க்கும் 7மணிக்குமிடையில் குறித்த பிரதேச வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த தாயும் 07 வயது மகனுமென இருவர் கூரிய ஆயுதமொன்றினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் மற்றொருவரும் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த விக்டோரியா கின் எனும் பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வெலிக்கடைப் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென அமெரிக்கா


 
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபேர்ட் ஓபிளெக் இதனை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு, தேசிய மீளிணக்கம் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இராணுவப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அமெரிக்கா அதிருப்தி கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகாவின் கைது விடயத்தில் சட்ட ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டுமெனவும் றொபேர்ட் ஓபிளக் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக