23 பிப்ரவரி, 2010





கூட்டணி
குறித்து பொன்சேகா நிலை என்ன?






கொழும்பு:இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் எதிர்க்கட்சிகள் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை சரத் பொன்சேகா தெரிவிக்க வேண்டும்' என, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


கடந்த ஜனவரி மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஜே.வி.பி., தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரே அணியில் போட்டியிட்டன. இக்கூட்டணி சார்பில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். இந்த தேர்தலில் பொன்சேகா தோல்வி அடைந்தார்.


தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. ஜே.வி.பி.,யும், இலங்கை முஸ்லிம் காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. இருந்தாலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் போட்டியிடுவதற்கான சூழ்நிலையை உருவாக்க, ஐக்கிய தேசிய கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் திசா அத்தநாயகா கூறியதாவது:பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் போட்டியிடலாமா என்பது குறித்து சரத் பொன்சேகாவிடம், அவர் கைது செய்யப்படுவதற்கு முன் பேசினோம். இது தொடர்பாக ஆலோசிக்க வேண்டியிருப்பதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் பொன்சேகா கூறினார். அவர் கைது செய்யப்பட்டதற்கு பின், அவரது வக்கீல் மூலமாக, இந்த தகவலை மீண்டும் அவரிடம் தெரிவித்தோம்.


இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.எனவே, பார்லிமென்ட் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் போட்டியிடுவது குறித்து, பொன்சேகா விரைவில் தனது முடிவை தெரிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட அவருக்கு விருப்பம் உள்ளதா என்பதையும் அவர் கூற வேண்டும்.இவ்வாறு திசா அத்தநாயகா கூறினார்.


இதற்கிடையே, இலங்கை எதிர்க்கட்சி எம்.பி.,யும்., மனித உரிமை ஆர்வலருமான ஜெயலத் ஜெயவர்த்தனே, ஐ.நா., மனித உரிமை பிரிவின் உயரதிகாரி நவநீதம் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை இலங்கை அரசு வாபஸ் பெற்றுள்ளதாகவும், அந்த பாதுகாப்பை தொடர்ந்து அளிக்க, அரசை வலியுறுத்தும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.





சிறிய அமைச்சரவை ராஜபக்ஷே முடிவு



கொழும்பு:"விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், மிகச் சிறிய எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்பர்' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளதாவது: வரும் ஏப்ரல் 8ல் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், எங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.


அவ்வாறு வெற்றி பெற்றால், தற்போது உள்ளது போல் பெரிய அளவிலான அமைச்சரவை அமையாது. மிகச் சிறிய எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்பர்.அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில், எனது தலைமையிலான அரசு தொடர்ந்து செயலாற்றும்.இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக