13 பிப்ரவரி, 2010




மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்போம்: இலங்கைப் பிரதமர்


கொழும்பு, பிப். 12: நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு (யு.பி.எஃப்.ஏ.) மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை கிடைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இப்போது அமலில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை ரத்து செய்துவிடுவோம் என்று பிரதமர் ரத்னசிறீ விக்ரமநாயக அறிவித்தார்.

இலங்கையில் இப்போது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 196 உறுப்பினர்களும் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில் கட்சி அளிக்கும் தேசியப் பட்டியலிலிருந்து தெரிந்தெடுக்கப்படும் 26 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இடம் பெறுகின்றனர்.

"இப்போதுள்ள தேர்தல் முறை சரியில்லை என்பது என்னுடைய கருத்து. இப்போது உள்ள உறுப்பினர்களை நம்முடைய உறுப்பினர்கள் என்றே நாம் அழைக்க முடியாது.

இந்த ஹோரண தொகுதியிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம், மற்றவர்கள் தோல்வி அடையலாம். ஆனால் இப்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் ஹோரணவைச் சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் வேறு பகுதியைச் சேர்ந்தவரைக் கூட கட்சிகள் தங்களுடைய பிரதிநிதியாக நியமிக்கலாம்.

இந்த சட்டத்தை மாற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்கள் தேவை. எனவே எங்கள் கூட்டணிக்கு அந்த ஆதரவை வழங்கினால் இந்தத் தேர்தல் முறையையே மாற்றிவிடுவோம்' என்றார் விக்ரமநாயக.

இப்போதைய நாடாளுமன்றம் 2004-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். பதவிக்காலம் முடிவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் அதிபர் மகிந்த ராஜபட்ச.

வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 19 தொடங்கி 26-ல் நிறைவடைகிறது. ஏப்ரல் 8-ம் தேதி வாக்குப் பதிவு.

இப்போது ஆளும் கூட்டணிக்கு 105 உறுப்பினர்களும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 உறுப்பினர்களும் உள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணிக்கு 22 உறுப்பினர்களும் ஜாதிகா ஹேள உருமய என்ற கட்சிக்கு 9 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஆளும் கூட்டணியில் இலங்கை சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, இலங்கை மகாஜன பட்சய, முஸ்லிம் தேசிய ஐக்கிய கூட்டணி, மகாஜன ஏக்சத் பெரமுன, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, தேச விமுக்தி ஜனதா கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக