2 பிப்ரவரி, 2010

மதியாமடு மக்கள் இவ்வாரம் மீள்குடியேற்றப்படுவதாக வவுனியா அரச அதிபர் தெரிவிப்பு-

மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின்கீழ் இன்று 1000; பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வுபெறச் செய்ய நடவடிக்கை-

கடந்த தேர்தல் காலப்பகுதியிலும் அதன்பின்னர் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 12 இராணுவ அதிகாரிகளை பதவிகளைப் பாராது சேவையிலிருந்து ஓய்வுபெறச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் அத்தியாவசியத் தேவைப்பாடாக காணப்படும் ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்கள் அரசியல் மயமாக்கப்படுதலை தடுக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமது சேவைக்காலத்தினுள் அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டு இராணுவ ஒழுக்கத்திற்கு மாறாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளை தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடித் தாக்கம் செலுத்துமென பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக யாழ். மீனவர்களுக்கு அசௌகரியம்-

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. யாழ்ப்பாண கடற்பிரதேசத்திற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்பதாகவும், இதனால் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தவேளை இந்த முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் இவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை என்ற போதிலும் அடிக்கடி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல்களை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் பொகொல்லாகம அறிவித்துள்ளார். 50 வீதமான மீன்பிடி உற்பத்திகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசஅதிபர் தெரிவித்துள்ளார். தற்போது வருடாந்தம் 2000 மெற்றிக்தொன் அளவில் மீன்உற்பத்தி செய்யப்படுவதாகவும், 1981ம் ஆண்டு காலப்பகுதியில் 4ஆயிரம் மெற்றிக்தொன் வரையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இன்று பூநகரியில் 1000ற்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்வு-

நலன்புரி நிலையங்களிலுள்ள ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்டவர்களே இன்றையதினம் மீள்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் முகாம்களில் எஞ்சியுள்ளவர்களை நெடுங்கேணி பிரதேசத்தில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களை எதிர்வரும் 05ம் மற்றும் 06ம் திகதிகளில் மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியில்லை-பாதுகாப்புச் செயலாளர்-

புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்று பாதுகாப்புச் செயலர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நவம்பர் 19ம் திகதி 02வது தடவையாக சத்தியப்பிரமாணம்-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நவம்பர்மாதம் 19ம்திகதி இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தனது இரண்டாம் கட்ட பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி ஆலோசனை கோரியிருந்தார். உயர்நீதிமன்ற நீதியரசர் அசோக டிசில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுவினர் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் நவம்பர் 19ம்திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2வது தடவையாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இது தொடர்பிலான விளக்க அறிக்கையொன்று உயர்நீதிமன்றத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் லிஸ்சியான் ராஜகருணா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக