2 பிப்ரவரி, 2010

35 இலட்சம் தனியார் ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள உயர்வு

தொழில் திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்துகிறது



தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 35 இலட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு 15 சதவீதம் அல்லது அதனை விடக் கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் தனியார் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் தொழில் திணைக்கள ஆணையாளர் ஜி. எஸ். பதிரண தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 2500 ரூபா சம்பள உயர்வுடன் இணைந்ததாக தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக 43 சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தின் படி தோட்ட ஊழியர்களுக்கு ஜனவரி 15 ஆம் திகதி முதல் சம்பள உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார்த்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 5750 ரூபாவாகும். ஆனால் பல தனியார்த் துறை ஊழியர்கள் இதனை விட பல மடங்கு அதிக சம்ப ளம் பெறுவதாக கூறிய அவர், சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

தற்பொழுது சகல தனியார் ஊழியர்களுக்கும் 100 ரூபா முதல் 300 ரூபா வரை வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2009 ஆம் ஆண்டில் தனியார்த் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாக தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார்த் துறைக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதோடு அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, மேலதிக நேரக்கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுக ளும் அதிகரிக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக