2 பிப்ரவரி, 2010


பிளாஸ்ரிக் பொருட்களிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்ய திட்டம்



பாவனைக்குதவாத பிளாஸ்ரிக் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளதாக சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் டபிள்யூ. அபேவிக்ரம தெரிவித்தார்.

இதற்காக யட்டியந்தோட்டையில் தொழிற்சாலை யொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாவனையில் இருந்து ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

எரிபொருள் உற்பத்தி செய்வதற்காக வவுனியா நிவாரணக் கிராமங்களில் பாவிக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களும் எடுத்துவரப்பட உள்ளதோடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பிளாஸ்ரிக் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. கிலோ 20 ரூபா வீதம் பிளாஸ்டிக் பொருட்கள் கொள்வனவு செய்யபட உள்ள தோடு அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் கூறினார்.

பிளாஸ்ரிக்கில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை தனியார் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். மொரட்டுவ பல்கலைக்கழத்தின் ஆலோசனையை பெற்று மேற்படி எரிபொருள் உற்பத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை 10 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதன் பெறுபேற்றின் படி பாரிய அளவில் எரிபொருள் உற்பத்தி செய் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலும் பிளாஸ்ரிக் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக கூறிய அவர், முதற்கட்டமாக பெற்றோல் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்றார்.

இந்த உற்பத்தித் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் உற்பத்தியாளருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.





மதியாமடுவில் இவ்வாரம் மீள்குடியேற்றம்



மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.

மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் இன்று ஆயிரம் பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவு ள்ளமையும் குறிப்பிடத்தக்கது


இலங்கைக்கான உலக உணவு திட்ட நிதியுதவி ரூ.3288 மில். அதிகரிப்பு



ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை 3288 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

2010 ஆண்டுக்கான செயற்திட்டங்களுக்கு இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

ஐ.நா.உலக உணவுத்திட்ட நிறுவனமானது ஏற்கனவே 2010 ஆம் ஆண்டுக்கென 134.45 மில்லியன் அமெரிக்க டொலரையே இலங்கைக்கென ஒதுக்கியிருந்தது. இடம்பெயர்ந்தோரின் உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பின்னர் இந்நிதி 163.50 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜோஷெல் கூரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளின் போதான உணவு, தாய் - சேய் சுகாதார உணவுத் திட்டம் யுத்தத்தினால் பாதிக்க ப்பட்ட மக்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு, யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் வாழும் மக்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக