15 பிப்ரவரி, 2010

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்பு



எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பங்கள் நாளை 16ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாள் 22 ஆம் திகதியாகும்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தமது விபரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக 2008ஆம் ஆண்டுக்கான அத்தாட்சிப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் அரச அலுவலகங்களில் தற்போது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தும், அலுவலர்களை நியமிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரியில் ஆர்ப்பாட்டம்




இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரி நகரில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் சுமார் 150இற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதியொருவர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் அங்கு உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை பலத்த பொலிஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி பொரளையில் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவினர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.



மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானம்




கிழக்கு மாகாண அமைச்சரான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட உத்தேசித்துள்ள அவர் தனது கிழக்கு மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக கூறினார்.

கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிக்கான ராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தினமான எதிர்வரும் 25ஆம் திகதி கையளிக்க உத்தேசித்துள்ளார்



ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல் : திஸ்ஸ





சரத் பொன்சேகா சார்பில் வழக்குத் தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு வருவதாக ஐக்கியத் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார் என பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க அங்கு மேலும் பேசுகையில்,

ஐனாதிபதி தேர்தல் முடிவுகளைக் கேள்விக்குட்படுத்தியது அரசாங்கம். இன்று ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்குத் தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக