6 ஜனவரி, 2010

தாயகக்குரல்

புதன்கிழமை (06.01.2010)

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பான தங்களது நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் தெரிவித்துவிட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் தொடர்பாக ஆராயவேன பலமுறை கூடியும் எந்த முடிவும் அறிவிக்கமுடியாது குழப்பத்தில் உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா ஆகியோரை பலமுறை சந்தித்து பேசியுள்ளனர். ஆனாலும் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டதாக தெரிகிறது. கடந்த வெள்ளியன்று இரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தமிழ் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் சந்தித்து பேசிய பின்னர் இந்தச் சந்திபபு வெற்றியளிக்கவில்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா விடுத்துள்ள செய்தியில் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்மைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம் பெற்றதாகவும் அவர்கள் முடிவுகளை அறிவிப்பதற்கு சிலகாலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
1982ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியும் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி தேர்தலுக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறி இரண்டு பக்கத்திற்கும் நல்ல பிள்ளையாக ஒதுங்கியிருந்தனர். நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடுவதில்லை எனவும் அதே நேரம் தேர்தலை பகிஷ்கரிப்பதில்லை எனவும் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் இப்போது இந்த முடிவுகள் கட்சிககுள் மீறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்க முன்னரே தேர்தல் அறிவிக்கப்பட்டால் யாரை ஆதரிப்பது என்பதில் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. சிலர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதுஇ என்றும் இன்னும் சிலர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவை ஆதரிப்பது என்றும் மற்றும் சிலர் தேர்தலை பகிஷ்கரிப்பது என்றும் மூன்றுவிதமான கருத்து நிலவியிருந்து. எனவே தங்களது நிலைப்பாட்டை வெளியிட முடியாது தமது நிலைப்பாட்டை இறுதி நேரத்தில் அறிவிப்பதாக தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ் மக்களின் பொது வேட்பாளராக தாம் களம் இறங்கப்போவதாக அறிவித்து அவரும் ஒரு வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை பகிஸ்கரிப்பது என முடிவெடுத்தால் தான் அதை ஆதரிப்பதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவிக்கிறார்.
இன்னொரு பக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமான தமிழ் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிக்கப்பது என முடிவெடுத்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எவ்வித அடிப்படை திட்டமும் இல்லை. கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முறையான பேச்சுவார்த்தை வைக்கவில்லை. எனினும் டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான் ஆகியோரை இணைத்து வடக்கு கிழக்கில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதை நியாயப்படுத்த முடியாது என ஜனாதிபதியின் சந்திப்பின் பின்னர் மாவை, சம்பந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக பேசுவதற்கு பலமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதியும், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரணவும் அழைப்பு விடுத்திருந்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு காரணங்களைக் கூறி அழைப்பை நிராகரிதிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களின் நிராகரிப்பு குறித்து பலர் அப்போது விமசனம் செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை எதிர்க்கும் கட்சிகள் அரசாங்கத்தில் இணைந்திருப்பதாலேயே ஜனாதிபதியின் அழைப்பை ஏற்கவில்லை என்று அப்போது சம்பந்தன் கூறியிருந்தார். இப்போது ஆட்சி மாற்றத்தின்மூலம் ஜே.வி.பி.யின் வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க தீவிரமாக உள்ளனர். இந்த சரத் பொன்சேகாதான் தனது இராணுவ உடையை கழையமுன்னர், இலங்கை சிங்களவர் நாடு. சிறுபான்மை இனம் இங்கு விருந்தினர்களாக வாழலாம் எனக் கூறியிருந்தார். அது மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்; இராணுவமுகாம்களை நிறுவி வடக்க கிழக்கின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறியவர். வடமாகாண ஆளுநராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை நியமித்த அரசாங்கத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஒரு அறிக்கையில் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அரசியல் மாற்றம் வரவேண்டுமானால் சரத் பொன்சேகாவுக்கே வாக்களி;க்கவேண்டும் என்பதையே மறைமுகமாக தெரிவிக்கின்றனர். ஆட்சி மாற்றம் மூலம் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க நினைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாதமாக்கும்.
இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவை வெற்றிகொள்ளச் செய்வதில் மேற்குலக நாடுகள் அதிக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷசிய ஆசிய நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் நெருக்கமான அரசியலுறவுகளை வைத்திருப்பதை ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் விரும்பவில்லை. எனவேதான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி இலங்கையில் ஒரு அட்சி மாற்றத்தைக் கொண்டு வர இந்த நாடுகள் முயற்சிக்கின்றன என்பதாக அரசு தெரிவிகிறது. அதேபோல அரசியல் விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.
எதிர்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒலிக்கும் முக்கிய கருப்பொருள் ஆட்சி மாற்றம், ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பனவே. இந்த வரிசையில் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக