6 ஜனவரி, 2010

ஜனாதிபதித் தேர்தல் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது.
தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
புராதன வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொண்டோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது. ஆதரவளிக்க கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.

இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டுமக்களின் சிறந்த நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.

தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே காணப்படுகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.

இரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும் இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும் செயலாகவே உள்ளது. அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.

தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.

அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே உதவும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்இ என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடைவைகள் தடுக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பாரதூரமான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் - ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ்ப் பேசும் மக்களின் கூடிய நலன் கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.

ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.