நாட்டின் ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் தினமான 26ம் திகதிக்கு இன்னமும் சில தினங்களே உள்ள நிலையில் சகல பிரதேசங்களிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தலைநகரில் தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பையும் மீறி சுவரொட்டிகள் ஒருபுறம் ஒட்டப்பட இன்னொருபுறம் அவை அகற்றப்படுகின்றன. தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிசாரும் சுவரொட்டிகளை அகற்றுகிறார்கள். இன்னொருபுறம் இனம் தெரியாதவர்களால் சுவரொட்டிகள் அகற்றப்படுகின்றன. கடந்த சில தினங்களாக தேர்தல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எதிர்கட்சியினரால், மற்றும் எதிர்கட்சி வேட்பாளரால் அள்ளி வீசப்படுகின்ற உத்தியோகபூர்வமற்ற வாக்குறுதிகள், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் நடுநிலையாளரின் வாக்கை கவரும்; தந்திரோபாய பிரச்சாரங்கள் என தேர்தல் களம் களைகட்டுகிறது.
தான் ஆட்சிக்கு வந்தால் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழித்து விடுவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300 லட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. சில கோரிக்கைளின் அடிப்படையில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக முன்னர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். இப்போது எவ்வித நிபந்தனையும் இன்றி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக சம்பந்தன் தெரிவிக்கிறார்.
புலிகளின் குரல்களாக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றவில்லை. தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றக்கூடாது என்பதற்கு அவர்கள் கூறிய காரணம், ~~சிங்கள தேசம் தனது அரசுத்தலைவர் யார் என்பதற்காக நடத்தும் தேர்தலில் பங்குபற்றவேண்டிய எவ்வித அவசியமும் தமிழ் மக்களுக்கு இல்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த பச்சை இனவாதி. அடுத்த வேட்பாளர் ரணில் வடிகட்டின இனவாதி. பச்சை இனவாதியை விட வடிகட்டின இனவாதி ஆபத்தானவர் என்று மகிந்தாவை விட ரணில் ஆபத்தானவர் என புலிகள் விமர்சனம் செய்திருந்தனர். இப்போது புலிகள் இல்லாத நிலையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஏகமனதான முடிவை எடுக்கமுடியவில்லை.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசியக் கூட்டமைப்புக்குள் மூன்றுவிதமான கருத்துக்கள் இருந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் தேர்தலை பகீஸ்கரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா தரப்பினர் தமிழ் மக்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவதன்மூலம் சுதந்திர ஜனநாயக அரசியலில் மீள்பிரவேசத்தை வலியுறுத்துகின்றனர். இரா.சம்பந்தன் தரப்பினர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குகின்றனர். இப்போது சிவாஜிலிங்கம் தமிழ் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கிறார். அதன் எதிரொலியாக சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக எடுத்த முடிவு இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் தேசியக் கூட்டமைப்பு தாங்கள் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான காரணங்களை விளக்கி இந்தியாவை சமாதானப்படுத்தும் நோக்கில் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை, சுரேஸ், அடைக்கலநாதன் ஆகியோர் புதுடில்லி சென்று அங்கு இந்திய மத்திய அரசு தலைவர்கள் எவரையும் சந்திக் முடியாமல் திரும்பியுள்ளனர். இதிலிருந்து கூட்டமைப்பின் தீர்மானம் இந்தியாவுக்கு அதிருப்தியை கொடுத்திப்பதாகவே தெரிகிறது.
கடந்த 60 வருடங்களாக தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் ஆகியன தமது வர்க்க நலன்சார்ந்து தீர்மானங்களை எடுத்து வந்தாலேயே இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வையும் இதுவரை அவர்களால் காண முடியவில்லை. அவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க காலங்களில் அமைதியான போக்கையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் முழுமையான தீர்வைத்தான் ஏற்போம் என்ற கடும் கோட்பாட்டையே வெளிப்படுத்தி வந்தனர்.
அவர்கள் வழிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு பெற்ற சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என எடுத்த முடிவும் வர்க்க நலன் சார்ந்ததே அல்லாமல் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததல்ல.
கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் எதையும் அது தமிழ் மக்களுக்கு நன்மை தருவதாக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததில்லை. அற்கு அவர்கள் கூறிய காரணம் தற்போதைய அரசியலமைப்பின்கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமில்லை என்பதுதான். ஆனால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா தற்போதைய அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர முயன்றபோது அதையும் இவர்கள் எதிர்த்துள்ளனர்.
10.07.2001ல் ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார். நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றுவதற்கு மக்கள் விரும்புகிறார்களா என்பதை அறிவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்தார். 05.08.2001 தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு கொழும்பில் கூடி அரசியலமைப்பில் மாற்றம் தேவையில்லை என்று சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். தற்போதைய அரசியலமைப்பின்கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமில்லை என்று கூறியவர்கள் அந்த அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதை ஏன் எதிர்க்கவேண்டும்.
2004ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையே கூட்டு; ஏற்பட்டதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.கட்சியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு வைத்துள்ளதால் சமாதானத்துக்கு ஆபத்து வந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை பயமுறுத்தியது.
இன்று அதே இனவாதக் கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ள சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது.
சுமணசிறி லியனகே என்பவர் ஐலன்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் தமிழ் மக்களைப் பார்த்து கேட்கிறார், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியவாதம் காட்டிய நாசகாரப் பாதையை தமிழ் மக்கள் தெரிவு செய்வார்களா? அல்லது புளொட், ஈ.பி.டி.பி. ரி.எம்.வி.பி. போன்ற ஜனநாயக தமிழ் அமைப்புகள் காட்டிய பாதையை தெரிவு செய்வார்களா? என்று கேட்கிறார்.
இந்த நிலைமைகளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக