17 டிசம்பர், 2009

தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு
No Image

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஆளணிகள் சொத்துகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 45 நிமிட நேரம் வழங்கப்படும். அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி எமது திணைக்களத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்கள் சமூகம் தர வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம்.

தமது உருவப்படங்களை காட்சிப்படுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன சட்டத்துக்கு முரணானவை. எனவே அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிரசாரங்களின் போது ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக மற்றுமொரு வேட்பாளர் பேசுவதையும் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். தேர்தல் தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அத்தொகுதிக்கான முடிவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன். ஒருவரை பலவந்தமாக தமக்கு வாக்களிக்குமாறு கோருவதும் தவறான செயலாகும்.

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரது மனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா ஓர் அமெரிக்கப் பிரஜை என்றும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாதென்றும் சட்டத்தரணி ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவுமில்லை என அவரது ஆட்சேபனை கடிதத்தை ஆணையாளர் நிரகரித்தார்.



போரினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்கக் கோரிக்கை


போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி அவசர நிவாரண உதவிகளையும், மறுவாழ்வுக்கான வசதிகளையும் செய்து தருமாறு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக கைத்தொழில், வேளாண் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கைகளின் விபரம் வருமாறு:

* இடம்பெயர்ந்துள்ள வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களில் மீண்டும் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.

* வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களைத் தமது சொந்த வாகனங்களில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

* வர்த்தகர்கள், கைத்தொழில் உரிமையாளர்கள், விவசாயிகள் அனைவரினதும் இழப்பீடுகளுக்கு உரிய நட்டயீடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த இழப்பீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் இந்த அமைப்பினால் திரட்டப்பட்டு வருகின்றன.

* தொழில் முயற்சியாளர்கள் போர்ப்பிரதேசங்களில் கைவிட்டுள்ள பொருட்களைப் பார்வையிடவும், அவற்றை அடையாளம் காட்டி மீளப் பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தமது தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாகக் குறைந்த வட்டி வீதத்தில் அரச தனியார் வங்கிகளின் மூலம் கடன்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐநா உதவி நிறுவனங்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் கிட்டுவதற்கும் வழி செய்யப்பட வேண்டும்.

* ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வர்த்தக அனுமதியை அவரவருக்கு வழங்கும் அதேவேளை, புதிய அனுமதிகள் வழங்கப்படும்போது, எமது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

* போர்ப்பிரதேசங்களில் கைவிடப்பட்ட, அரச பதிவு பெற்ற, உரிமை மாற்றம் செய்யப்படாத அனைத்து வாகனங்களுக்கும் உரிய நட்டயீடு வழங்கப்படுவதுடன், கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். அவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போது, அவர்களுக்குத் தீர்வை விலக்களிக்கப்பட வேண்டும்.

* காப்புறுதி செய்துள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் உரிய காப்புறுதி இழப்பீட்டுப் பணம் வழங்கப்பட வேண்டும்.

* அரச வங்கிகள் வர்த்தகர்கள், விவசாயிகளுக்கு வழங்கிய கடன்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள், ஜனாதிபதி, வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அமைப்பின் தலைவர் அ.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைச் சார்ந்தவர்கள், தமது இழப்பீடுகள் தொடர்பான விபரங்களை அதற்கென இந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தின் மூலமாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இத்தகைய விபரங்களைத் தந்து பதிவு செய்யாதவர்கள் உடனடியாக வவுனியா மில் வீதி, 115 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக, கைத்தொழில், வேளாண் அமைப்புடன் தொடர்பு கொள்ளுமாறு அந்த அமைப்பின் செயலாளர் செ.பிரபாகரன் கோரியுள்ளார்.




சிவசக்தி ஆனந்தனி ன் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்து சிவாஜிலிங்கம் கடிதம்
No Image



எமது இணையத்தளத்தில் 11-12-2009 ஆம் திகதி வெளியான செய்தி ஒன்றில் தனது பெயரைக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்ததாகக் கூறி, அதற்கு மறுப்புத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பு வைத்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு :

"தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனை திசை திருப்புவதற்காக ஒரு பகுதிதயினரிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் வாங்கியுள்ளார் என சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார்.

அவருடைய குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். வன்னிப் பகுதியில் போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும், முடிவடைந்து மூன்று லட்சம் மக்கள் முள்வேலி முகாம்களில் அகப்பட்டிருந்ததைக் கண்டித்தும் 13 மாதங்களாக இலங்கைக்கு வராமல் இந்தியாவிலும் பிரித்தானியாவிலும் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை வீதிகளில் இறங்கி நடத்தியவன் நான் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

அது மாத்திரமல்ல, இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே பல போராட்டங்கள் நடத்தியதையும் ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக இந்தியாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் 5 தடவைகள் பிரித்தானியாவுக்கும் 3 தடவைகள் சிங்கப்பூருக்கும் ஒரு தடைவ மலேசியாவுக்கும் சென்று இந்தியா திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

தமிழ் மக்களின் மீதான இனப் படுகொலைகளைக் கண்டித்து பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக நடைபெற்ற வீதி மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டேன். பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, கூண்டில் அடைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டேன்.

எமது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக 2009 பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமது ஆயுதங்களை 3ஆம் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஊடக அறிக்கை மூலம் கேட்டிருந்தேன்.

அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் நிகழ்வில் ஆற்றிய உரை சம்பந்தமாக தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வழக்கை எதிர்நோக்கியவன் நான். சுதந்திர தமிழீழப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்ககீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தமை என என்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. கடந்த மாதம் நாடு திரும்பிய பின்னரும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வன்னிப் போரின் போது 50 ஆயிரம் தமிழ் மக்களைப் படுகொலை செய்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு மனசாட்சியுள்ள தமிழனால் முடியுமா?

வன்னிப் போரில் சிங்களப் போர் வெற்றி நாயகன் தானே என உரிமை கொண்டாடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கும் மனசாட்சியுள்ள தமிழனால் முடியுமா?

இம்மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 22 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் 7 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தோம். ஐந்து பேர் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர்.

ஏனைய ஐந்து பேரும் பொறுத்திருப்போம் என்று கூறிய பொழுது ஈ. பி. ஆர். எல். எப். அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆட்சி மாற்றத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.

கலந்து கொண்ட 17 பேரில் 2 பேர் பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவரையும் ஆதரிக்க முடியாது என்ற கருத்தை முன் வைத்தனர். அவர்களில் ஒரு சிலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்குமாறு தூண்டிய தமிழ் அரசியல்வாதி யார் என்பதனை நான் அறிவேன். துணிவிருந்தால் அந்த அரசியல்வாதி குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும் என்று சவால் விடுகிறேன்.

சிவசக்தி ஆனந்தனிடம், கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிய வேண்டாம் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வெகு விரைவில் சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு சிவாஜிலிங்கம் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக