17 டிசம்பர், 2009

பௌத்த குருமாரை பயன்படுத்தி பொன்சேகா வேட்புமனு தாக்கல் செய்வதை தடுக்க சதி-மங்கள சமரவீர எம்.பி. குற்றச்சாட்டு


பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா வேட்புமனுத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கு பௌத்த குருமாரைப் பிழையான வழியில் திசைதிருப்பி தேர்தல்கள் திணைக்களத்தை முற்றுகையிடுவதற்கான சதித்திட்டத்தை நாளை (இன்று) வியாழக்கிழமை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதõக குற்றம்சாட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும், எம்.பி.யுமான மங்கள சமரவீர, சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் எமது படையினரை ஆஜர்படுத்த முடியாது. மக்களை ஏமாற்றவே அரசு இவ்வாறான பிரசாரத்தை மேற்கொள்கின்றது என்றும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை அவரது ஊடகப் பிரிவு பொறுப்பாளர்களான மங்கள சமரவீர எம்.பி. மற்றும் அநுரா திஸாநாயக்க எம்.பி. ஆகியோர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மங்கள சமரவீர எம்.பி. மேலும் கூறியதாவது:

தென் பகுதியைச் சேர்ந்த ஒமாரே கஸ்ஸப்ப தேரரைப் பயன்படுத்தி பௌத்த மதகுருமாரைப் பிழையான வழியில் திசைதிருப்பி, பஸ்கள் மூலம் கொழும்புக்கு நாளை (இன்று) வியாழக்கிழமை கொண்டுவருவதற்கு அரசாங்கம் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

பிக்குமாரைப் பயன்படுத்தி தேர்தல் திணைக்களத்தை முற்றுகையிடச் செய்து ஜெனரல் சரத் பொன்சேகாவை காலை 11.00 மணிக்குத் தடுத்துவைத்து, வேட்புமனுவைத் தாக்கல் செய்வதை தடுத்து அவரது வேட்புமனுவை நிராகரிக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது. அத்தோடு, இம் மதகுருமார் மத்தியில் அமைச்சரொருவரைச் சார்ந்த பாதாள உலகக் கோஷ்டியினரையும் வேடமணியச் செய்து, தேர்தல்கள் திணைக்கள பிரதேசத்தில் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெற்றி நிச்சயம் என்றால் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? இதன்மூலம், அரசாங்கத்தின் தோல்வியும் வங்குரோத்து நிலையும் வெளிப்படுகின்றன. எந்தவொரு சதித்திட்டம் எந்த ரூபத்தில் உருவெடுத்தாலும் எமது வெற்றியை, தடுத்துவிட முடியாது. அனைத்தையும் தகர்த்தெறிவோம்.

சர்வதேச யுத்த நீதிமன்றம்

எமது படையினரை சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது. இது தொடர்பான உடன்படிக்கையில் 29 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. ஆனால், நாம் கைச்சாத்திடவில்லை.

ரணிலின் ஆட்சிக்காலத்திலும், நான் வெளிநாட்டு அமைச்சராகப் பதவிவகித்த போதும் லக்ஷ்மன் கதிர்காமர் பதவிவகித்த போதும் சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடக் கோரிய போதும் நாம் கைச்சாத்திடவில்லை.

நல்லவேளை, பாதுகாப்புச் செயலாளர் பிரஜாவுரிமை பெற்றுள்ள அமெரிக்காவும் இவ்உடன்படிக்கையில் கைச்சõத்திடவில்லை. எனவே, யுத்த நீதிமன்றத்திற்கு எமது படையினரை அனுப்பமாட்டேன், நான் போவேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மார்த்தட்டிக் கொள்வதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

இது படையினரின் மனவலிமையைக் குறைத்து மக்களை ஏமாற்றும் பிரசாரமாகும்.

யார் காட்டிக்கொடுத்தவர்கள்?

எமது படையினர் ஒழுக்கமுள்ளவர்கள்; எந்தவிதமான யுத்தக் குற்றமும் இடம்பெறவில்லை. தோல்விகள், வெற்றிகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாகவும், எனவே அவர் தேசத்துரோகியென்றும் தயாசிறி கோமின், விமல் வீரவன்ச உட்பட அரசாங்கத்தின் அடிவருடிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஜெனரல் சரத் பொன்சேகா, படையினர் அனைவரது பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறானதோர் நிலையில், இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாக கூறுவதால் என்ன நடக்கும்? உண்மையிலே இரகசியங்கள் இருக்கின்றன என்ற தோற்றப்பாடு உருவாகும். இது எமது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலல்லவா. எனவே 41 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றி பயங்கரவாதத்தை ஒழித்து அனைத்திற்கும் தானே பொறுப்பெனக் கூறிய ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டைக் காட்டிக் கொடுத்தவரா? தேசத்துரோகியா? அல்லது, இராணுவ இரகசியங்கள் இருப்பதாகக் கூறி படையினரைக் காட்டிக்கொடுப்பவர்கள் தேசத்துரோகிகளா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். அலரிமாளிகையில் என்ன நடக்கின்றது பேசப்படுகின்றதென்பது அனைத்தும் பேச்சுக்கள் நடைபெற்று அரை மணித்தியாலயத்திற்குள் எனக்கு கிடைத்துவிடும். அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. அன்று விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருந்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா. செத்துப் பிழைத்தவர். ஆனால், இன்று இராணுவ இரகசியங்களை வெளியிட்டாரெனக் கூறும் அரசாங்கத்தின் அடிவருடிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை 17 வருடம் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கூறுகின்றனர் என்று இங்கு கருத்துத் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேசத்துரோகிகள் யாரென்பதை மக்கள் புரிந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும். இன்று ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் அரசாங்கம் தினம் தினம் ஒரு தலையங்கத்தைத் தேடிக்கொள்கிறது. ஆனால், நிலையான பிரசார நடவடிக்கைகள் எதுவுமே அங்கில்லை. தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள 15,000 தமிழ் இளைஞர்களை விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே ஏன் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. அன்றாடம் ஒரு தலையங்கத்தை வைத்துக்கொண்டு வங்குரோத்து பிரசாரத்தை அரசாங்கம் நடத்துகிறது. அலரிமாளிகையில் தினமும் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இது யாருடைய பணம். பாதாள உலகக் கோஷ்டியினர், சலுகைகளைப் பெற்றோர், போதைவஸ்து விற்பனையாளர்கள் போன்றோரே உதவிவருகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக