12 டிசம்பர், 2009


ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கவே ஐக்கிய தேசிய கட்சி

- ஜே.வி.பி கூட்டு

இலங்கையின் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கவே ஐ.தே.க. - ஜே.வி.பி கூட்டு சரத் பொன்சேகாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

எந்த விதத்திலும் ஒத்துச் செல்ல முடியாத ஐ.தே.கவும், ஜே. வி. பியும் கூட்டுச் சேர்ந்திருப்பது ஜனநாயகத்தைப் பெற்றுத் தரவோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்ல.

மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் முடிவுறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தொடக்கம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்தும்படி கடுமையாக அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்த அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினார். இந்த சமயத்தில் மூன்றாம் மண்டல நாடுகள் தான் எமக்கு பக்கபலமாக இருந்தன. மேற்குலக நாடுகள் எமக்கு உதவிகள் நல்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்திருப்பதால் வோஷிங்டனின் இணக்கப்பாட்டுடன் சரத் பொன்சேகாவை எதிரணி அபேட்சகராக கொண்டு வந்துள்ளனர்.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதிர்கொள்ளுகின்ற மிக மோசமான அரசியல் சூழ்ச்சியே இது. வெளிநாட்டு சதியாளர்களின் தேவையை நிறைவேற்றவே ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டு இந்த சூழ்ச்சியில் பங்காளியாகியுள்ளது.

எதிரணி அபேட்சகர் இராணுவத்தில் 40 வருட காலம் சேவையாற்றியவர். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் அவரது அரசியல் பிரவேசம் இந்நாட்டு ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாகும்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்தில் சரத் பொன்சேகா இராணுவத்திற்கு ஒரு இலட்சம் பேரைத் திரட்ட வேண்டும். முப்படைகளுக்கும் கட்டளை இடக்கூடிய அதிகாரம் தமக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது அவரது உள்நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றது.

இதனால் இந்நாட்டின் ஜனநாயக அரசியல் இராணுவ மயமாகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.



. தே. க. - ஜே. வி. பி. கூட்டுக்குள் முரண்பாடு:

இரு வாரங்களுக்குள் பொன்சேகாவின் பிரசாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படும்

ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு காரணமாக அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பாரிய முட்டுக்கட்டையை எதிர்கொள்ளும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கோஷங்களை எதிரணி அபேட்சகர் தமது பிரசாரத்திற்காக களவாடியுள்ளார் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

தேசப்பற்றாளர் முகாமிலிருந்த சரத் பொன்சேகா எதிரணி முகாமுக்குள் சென்றதால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலு முள்ள புலி ஆதரவாளர்களே மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் ஐ. ம. சு. மு. வின் செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலின் எதிரணி அபேட்சகரின் ஊடகப் பேச்சாளர்களாக எம்.பிக்களான மங்கள சமரவீரவும் அனுர குமார திசாநாயக்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் ஐ. தே. க. சார்பில் எவருமே நியமிக்கப்படவில்லை. ஐ. தே. க.வில் பல பேச்சாளர்கள் இருந்தும் அவர்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன? இது அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு ஐ. தே. க. - ஜே. வி. பி. கூட்டுக்குள் ஏற்பட்டுள்ள உள்முரண்பாடே காரணம்.

ஐ. ம. சு. முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் அபேட்சகரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், எதிரணி அபேட்சகருக்கு பிரசாரம் செய்யக் கூட ஆளில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கோஷங்களை களவாடியே சுவரொட்டி வெளியிடும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் எதிரணி அபேட்சகர் அரசியலில் ஒரு குழந்தைதான்.

இதன் காரணத்தினால் தான் அவர் தேசிய ஊழியர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு அரச ஊழியர்களுக்கு ரூ. 10,000 படி சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இதனை அவரால் எவ்வாறு செய்ய முடியும். இவரது அறிவிப்புபடி சம்பள உயர்வு வழங்குவதாயின் வருடத்திற்கு 120 பில்லியன் ரூபா தேவை.

ஆகவே, பொருளாதாரம், திறைசேரி குறித்த அறிவு இருந்திருந்தால் அவர் இவ்வாறு அறிவித்திருக்க மாட்டார். சரத் பொன்சேகா எதிரணி ஜனாதிபதி தேர்தல் அபேட்சகர் என ஜே. வி. பி. அறிவித்ததை தொடர்ந்து அவுஸ்திரேலியா, கனடா,பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தனர்.



ஆசியாவின் கேந்திர நிலையமாக இலங்கை மாற

கல்வித்துறையில் விரிவான மாற்றங்கள் வேண்டும்

ஆசியாவின் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டுமானால் நமது கல்வித் துறையில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையானது கடல், வான் மற்றும் வர்த்தகத் துறை கேந்திர நிலையமாக மாறிவருகின்ற போதும் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே தமது எதிர்பார்ப்பாகு மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது எதிர்கால சந்ததியினரை விஞ்ஞான உலகிலும், தொழில்நுட்ப உலகிலும் வெற்றிபெறக் கூடிய வகையில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு கல்வித் துறையில் சகல அதிகாரிகளுக்குமுரியதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வித்துறை நிர்வாகச் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிப தியைச் சந்தித்த நிகழ்வொன்று நேற்று முன்தினமிரவு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

அறுபது ஆண்டுகளுக்கு மேல் நாம் ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யும் நாடு இது. அந்த ஜனநாயகத்தை நாம் தொடர்ந் தும் பாதுகாப்பது அவசியம். ஜனநாயகத்தை உதாசீனப்படுத்திய காலகட்டமொன்றை நாம் கடந்து வந்துள்ளோம்.

சமாதான உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சித்த யுகமொன்று இருந்தது. இது போன்ற செயல்கள் ஜனநாயக நாடொன்றில் இடம்பெறக் கூடாது. பட்டலந்தை வதை முகாம் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. எனினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஆரம்பித்த போராட்டத்தின் பலனை இன்று நாடு அனுபவித்து வருகின்றது.

இந்நாட்டின் சகல மக்களினதும் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியம் என்பதாலேயே வடக்கு மக்களும் தமக்கு விருப்பமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தீர்மானித்தோம். இதன் மூலம் நாட்டின் சகல மக்களும் சமமாக ஜனநாயக உரிமையை அனுபவிப்பார்கள் என நம்புகிறேன்.

வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. எனினும் அவர்கள் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். ஜனநாயக நாட்டின் தலைவன் என்ற வகையில் அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம். நான் ஒரு பகுதியினருக்கு தலைவனாக இருப்பதில் பயனில்லை.

அதனால் தான் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.

எனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்களாக உள்ள போதும் அவர்களுக்கு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலைக் கொண்டு வந்தோம்.

அம்மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டுள்ளோம். மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. தற்போது நிவாரணக் கிராமங்களில் 94,000 பேரே உள்ளனர். தினமும் மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தவறு என சிலர் விமர்சிக்கின்றனர். எனினும் இதனை நான் தவறென்று கருதவில்லை. மக்களுக்கு அதற்கான உரிமை உள்ளது என்று நாம் நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

யாழ்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச மனிதஉரிமை தினநிகழ்வில் புளொட் தலைவர் பங்கேற்று உரை ரரறரினார்














சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனிதஉரிமை இல்லத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பி மாவை சேனாதிராஜா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ஆகிய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும், யாழ். மாநகரமேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முதலில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்கள், வீரசிங்கம் மண்டபத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் இந்த மரம் நடுகை இடம்பெற்றுள்ளது. 1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி இடம்பெற்ற 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 36ம் ஆண்டு நினைவு தினத்திற்கு இன்னும் ஒருமாதகாலமே உள்ளது. இந்நிலையில் அன்றே மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அனைத்துமே தமிழ் மக்களுடைய அரசியல் மற்றும் மனித உரிமைகளை மீறி வந்திருக்கின்றன. அதன்காரணமாக ஆரம்பத்தில் சாத்வீக ரீதியிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்டமாக மாற்றம்பெற்றது. ஆனால் துரதிஸ்டவசமாக மனித உரிமை மீறல்கள் என்ற விடயத்தில் போராட்ட இயக்கங்களான நாங்களே ஒவ்வொருவருடைய கருத்துச் சுதந்திரங்களையும், பேச்சு சுதந்திரங்களையும் மீறி நடந்திருக்கிறோம். இவ்விடயங்களில் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினாலும், பொதுவாக நாம் அனைவருமே மற்றையவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கத் தவறியுள்ளோம். இங்குள்ள யாவரும் ஒற்றுமை ஒற்றுமை என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஒற்றுமை என்று கூறிக்கொண்டு நாம் பழைய நிலையை நோக்கிச் செல்லமுடியாது. எனினும் ஒற்றுமையை நாமும் விரும்புகிறோம்.

வடகிழக்கில் ஜனநாயகம், பன்முகத்தன்மை என்பன நிச்சயமாக இருக்கவேண்டும். நான் ஒரு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட ஒரு தகப்பனின் மகன் என்ற ரீதியிலும், அதேபோல வாழ்வுரிமை மறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான எங்களுடைய தோழர்களின் அடிப்படையிலும் கூறுகிறேன், நாங்கள் மே 18க்குப் பிறகாவது தமிழர்களுக்குள்ளும், தமிழ்க் கட்சிகளுக்குள்ளும் ஒருவருக்கொருவர் மற்றைவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மற்றையவர்கள் தமது கருத்தினைக் கூறக்கூடிய சுதந்திரத்தையாவது அனுமதிக்க வேண்டும். இதேவேளை போராட்டத்தில் பங்குபற்றிய அல்லது ஆதரவளித்த எந்த ஒரு கட்சியும் மனிதஉரிமை மீறல்களில் தமக்குச் சம்பந்தமில்லையென்று கூறமுடியாது. அது மாத்திரமல்ல பொதுமக்கள்கூட சில சாராருடைய மனிதஉரிமை மீறல்களை கைகட்டி நின்று பார்த்தது மாத்திரமல்லாமல், அதற்கு ஆதரவும் அளித்திருக்கிறார்கள். இந்த நிலைகளில் மாற்றம் வந்தால்தான் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற்று மானத்துடன் வாழலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தினால் வந்த அழிவுகள், தமிழ்மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளால் பிரித்தாளப்பட்டமை என்பவற்றை எடுத்துவிளக்கும் வகையில் மிகவும் சிறந்த நிகழ்வாக சிறுவர்களின் நாட்டிய நாடகமொன்றும் இடம்பெற்றது. அடுத்ததாக வீரசிங்கம் மண்டபத்திலிருந்து யாழ். பஸ் நிலையம் வரையில் மனித உரிமையை வலியுறுத்தும் வகையிலான பேரணியொன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு ஆரியகுளக் கரையில் தீபங்கள் ஏற்றப்பட்டு மனித உரிமை நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக