12 டிசம்பர், 2009

இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் நாம் ஆதரிக்கவில்லை சென்னையில் ரொபேட் ஒ பிளேக் தெரிவிப்பு

இலங்கையில் அமைதியாகவும் நியாயமான முறையிலும் தேர்தல் நடைபெற வேண்டும். வன்முறைகள் இன்றி தேர்தல் நடைபெறுவது அவசியம். நாம் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்று அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபேட் ஒ பிளேக் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வருகைதந்த அவர் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதகரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு சென்று வந்தேன். இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள், மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டு வரும் விதம் எங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கிறது. அங்கு இன்னும் 1 லட்சத்து 15 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கே திரும்பிவிட்டார்கள். முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களும், சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை ஜனாதிபதி முன்பு சொன்னபடியே, வரும் ஜனவரி மாதத்துக்குள் அவர்கள் அனைவரும் சொந்த இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மன்னார் பகுதியில்மின் விநியோகம்

நான் இலங்கையில் மன்னார் பகுதியிலுல் உள்ள கிராமங்களுக்கு சென்றேன். அகதிகள் முகாம்களில் இருந்து அப்பகுதிக்குத் திரும்பிய மக்களிடம் நான் பேசினேன். அங்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மக்கள் தங்களது வீடுகளை கட்டுவதற்கான பொருட்களை இலங்கை அரசு தந்துள்ளது. உணவுப் பொருட்களையும் சிறப்பான முறையில் விநியோகித்து வருகிறது. அங்கு விவசாயப் பணிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், சாலைகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் கிடந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக பலவித சேவைகளை அங்குள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கி வருகிறது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். இந்த நடவடிக்கைககள் உறுதியாக தொடரும் என்று நம்புகிறேன்.

சீனா

தமிழர்கள் வாழும் பகுதியில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு தர வேண்டும் என்று நாங்கள் இலங்கை அரசிடம் வற்புறுத்தியுள்ளோம். அங்கு நிலைமை சீரடைந்து, தற்போது அங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி மாதம் நடைபபெறுகிறது. அதன்பிறகு அங்கு உள்ளாட்சி தேர்தலும், மாகாண தேர்தலும் நடைபெறுகிறது. இது அங்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அங்கு புதிய அரசியல் தலைமுறையினர் உருவாவார்கள். இவர்கள், அந்தப் பகுதியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும், தேசத்தை வலுப்படுத்தவும் உதவுவார்கள்.

சமீபகாலமாக இலங்கை விஷயங்களில் அமெரிக்கா அதிகம் ஆர்வம் காட்டும் வகையில் அதன் கொள்கையில் இருப்பதாக கூறுகிறார்கள். அங்கு சீனாவும் கவனம் செலுத்தி வருவதால்தான் எங்களது கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறு. அங்கு நிலவிய சூழலை கருத்தில் கொண்டே நாங்கள் தலையிட்டிருக்கிறோம்.

விசாரணையின்றி இருப்பவர்களை

இலங்கையில் உள்ள சில முகாம்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படக்கூடிய 11 ஆயிரம் தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விசாரணை இன்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், புலிகளுடன் தொடர்பு இருப்பவர்களை மட்டும் தண்டித்து மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டால் நாங்கள் வரவேற்போம். இலங்கையில் அமைதியான நியாயமான முறையில் தேர்தல் நடக்க வேண்டும். வன்முறை தலையீடு இன்றி தேர்தல் நடக்க வேண்டும்.நாங்கள் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை.

ஒபாமா இந்தியா வருகை

இந்தியா அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தவும், அடுத்த ஆண்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் வந்திருக்கிறேன். அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகின் எதிர்கால பாதுகாப்பையும், நன்மையையும் உறுதி செய்வதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளி என்று அதிபர் ஒபாமா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் ஹெட்லி டேவிட் ஹெட்லி விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய உள்துறை மந்திரி சிதம்பரம் அமெரிக்கா வந்தபோது சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகள் அமைந்தன. பாகிஸ்தானுக்கு நாங்கள் அளிக்கும் உதவி, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாமல் இருப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறுவது 2011ஆம் ஆண்டு இறுதியில்தான் தொடங்கும். ஆனால், அது அப்போது நிலவும் சூழலை பொறுத்து மறுபரிசீலனை செய்யப்படும். ஆப்கானிஸ்தான் இராணுவத்தை வலுப்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக