12 டிசம்பர், 2009

உருத்திரகுமாரனைக் கைதுசெய்யக்கூடிய ஆதாரங்களை அமெரிக்காவுடன் பகிரத் தயாரென அரசாங்கம் தெரிவிப்பு

புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனைக் கைதுசெய்வதற்கான ஆதாரங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனிடம் (கே.பி) மேற்கொண்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் உருத்திரகுமாரனுக்கும் புலிகளுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து ஆதாரங்களை திரட்டி வருவதாக பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்நிலையில் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் எவ்வித குற்றச்செயல்களுடனும் தொடர்புபடாத நிலையில் அவரை அங்கு கைதுசெய்ய முடியாதென தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளெக் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் அவரை அங்கு கைதுசெய்வதற்கான போதிய ஆதாரங்கள் இலங்கையிடம் இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அவற்றை அமெரிக்காவுடன் பகிர இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


லங்கை கலைஞர்கள் சங்கம் ஜனாதிபதி மகிந்தாவுக்கே ஆதரவு


- ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்கவிருப்பதாக இலங்கை கலைஞர்கள் சங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.தகவல் ஊடக அமைச்சில் நேற்றுக்காலை ஒலி ஒளி நிபுணத்துவ கலந்துரையாடல் எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கப் போவதாக கலைஞர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளர்களான சுமித்ரா பீரிஸ், டக்ளஸ் சிறிவர்தன, ரோஹன வீரசிங்க, சோமரத்ன திசாநாயக்க நடிகர்களான மாலினி பொன்சேகா, ரவீந்திர ரன்தெனிய, ஜெக்சன் அந்தனி, பாடகி நீலா விக்கிரமசிங்க அறிவிப்பாளர் ரேனுக்கா பாலசூரிய ஆகியோர் ஏனைய கலைஞர்கள் சார்பில் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தள்ளனர். நாட்டிலுள்ள கலைஞர்கள் நாட்டை மிகவும் நேசிப்பவர்கள். பொதுமக்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தேசத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கு சிறந்த தலைவர் ஒருவரை தெரிவுசெய்ய பொதுமக்களை வழிகாட்ட வேண்டியது எமது கடமையாகுமென நடிகர் ரவீந்திர ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

மோதல்களில் தொடர்புடைய சிறார்களை குடும்பத்தாருடன் வாழ அனுமதிக்க வேண்டும்ஐ.நா பிரதிநிதி-

உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது இதுபோன்ற மோதல்களில் சம்பந்தப்பட்ட சிறார்கள், தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழும்போதே, போரினால் அவர்களுக்கு உண்டான உளவியல் பாதிப்புகளில் இருந்து நல்லமுறையில் மீண்டு வருகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக, ஐநாவின் சிறுவர்ககள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரத்தை கவனிக்கும் ஐ.நா. விசேட பிரதிநிதி ஜெனரல் பேட்ரிக் கொமேர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருடைய ஐந்துநாள் இலங்கை பயணத்தின்போது, புலிகளால் வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டவர்களில் 300சிறார்களை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் சிறுவர்களை மீளவும் அவர்களது குடும்பங்களுடன் இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெற்றிக் கெம்ராட் தெரிவித்துள்ளார். கூடிய விரையில் இடம்பெயர்ந்து வேறுஇடங்களில் தங்கியுள்ள சிறுவர் சிறுமியர் தங்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியரை இன்னமும் காணவில்லை அல்லது சொந்தக் குடும்பங்களுடன் இன்னமும் இணைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென குறிப்பிட்டுள்ளார். விலைமதிப்பற்ற சிறுவர் பராயத்தை அர்த்தபூர்வமானதாக மாற்ற வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் நிவாரணங்கள் வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவினர் யாழ்.விஜயம்-


எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று யாழ்.குடாநாட்டிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினரே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இக்குழுவினர் நல்லூர் கந்தன் ஆலயம் மற்றும் யாழ்.நாகதீப விகாரை என்பவற்றுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தையும் சந்தித்துப் பேசியுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள உயர்கல்வி மாணவர்களையும், யாழ். சமாதான நல்லிணக்க குழுவினரையும், இதனைத் தொடர்ந்து யாழ். வர்த்தகப் பிரமுகர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சிகளின் தூதுக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ் மக்களின் பேரழிவுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் ஒரு ஆட்சிமாற்றத்தைக் காணவேண்டுமாயின் அனைவரும் சரத் பொன்சேகாவிற்கே வாக்களிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெறும் பட்சத்தில் ஏ9வீதி முழுமையாக திறக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார். யாழ். குடாநாட்டின் கல்வி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்காக அங்கு மேலும் பல்கலைக்கழகங்களை நிறுவ எண்ணியுள்ளதாகவும், அது மட்டுமன்றி நாட்டின் ஏனைய தமிழ்ப் பகுதிகளின் கல்வி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


அம்பாறையில் 52,218, மட்டக்களப்பில் 1220 குடும்பங்கள் அடைமழையால் பாதிப்பு

- அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நேற்றுவரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் 52218குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிர் இழந்துள்ளதாக முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். சியாத் தெரிவித்துள்ளார். அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1220குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். 200குடும்பங்களைச் சேர்ந்தோர் மாத்திரம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவுகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதேச செயலக பிரிவுரீதியாக கல்முனையில் 7565குடும்பங்களும் காரைதீவில் 2595குடும்பங்களும் சாய்ந்தமருதுவில் 6566குடும்பங்களும் நிந்தவூரில் 7000குடும்பங்களும் அட்டாளைச்சேனையில் 5842குடும்பங்களும் ஆலையடிவேம்பில் 5009குடும்பங்களும் திருக்கோவிலில் 8426குடும்பங்களும், சம்மாந்துறையில் 9,895குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை பதில் அரசாங்கஅதிபர் தெரிவித்துள்ளார். பொத்துவில் பிரதேசசெயலாளர் பிரிவில் 6200குடும்பங்களும், நாவிதன்வெளியில் 1800குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது


பிரபாகரனும், பொட்டம்மானும் உயிரிழந்ததாக இந்தியாவிடம் இலங்கை அறிவிப்பு

- புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் உயிரிழந்ததாக இந்திய அரசிடம் இலங்கையரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பாளர் பொட்டுஅம்மான் ஆகியோர் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலைவழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக இந்தியாவினால் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் இலங்கையின் இந்த அறிவிப்பின்படி நீண்டகாலமாக தொடர்ந்து வந்த ரஜீவ்காந்தி படுகொலை வழக்கின் சர்ச்சை முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரஜீவ்காந்தியின் படுகொலை விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த இருவரதும் மரணச் சான்றிதழ்களையும் வழங்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 26பேருக்கு இந்திய நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதுடன், அவர்களில் நால்வருக்கு மரணதண்டனையும் விதித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக