13 நவம்பர், 2009

மரக்கறிகள் முதல் அனைத்தும் துணுக்காய் ப.நோ.கூ. சங்கத்தில் விற்பனை



இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்து வரும் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் செயற்படத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் தம்பிப்பிள்ளை பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் பிரதேசங்களில் நான்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று கிளைகளை உடனடியாகத் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான பாலுணவுகள், மரக்கறிவகைகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய் என்பனவும் முன்னுரிமை அடிப்படையில் இந்தக் கிளைகளின் ஊடாகப் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்றத்தின் முக்கிய அம்சமாகிய வீடுகளை அமைப்பதற்குரிய கூரைத்தகடுகள், கூரைவிரிப்புகள் மரம், தடிகள் என்பவற்றை அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கி வருகின்றது.

இவற்றை விட மக்கள் மேலதிகமான மரம் தடிகள், கூரைத்தகடுகள் என்பவற்றையும், கூரைகளை அமைப்பதற்குத் தேவையான ஆணிகள் போன்ற முக்கிய பொருட்களையும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகளே விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக