13 நவம்பர், 2009

மீளக்குடியமர்த்தப்பட்ட துணுக்காய் மக்களின் போக்குவரத்துக்கென இரு பஸ் வண்டிகள்


மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கென இரண்டு பஸ்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வியாழனன்று துணுக்காய் 65 ஆம் படைப்பிரிவின் தலைமையகத்தில் துணுக்காய் பிரதேச மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாகவும், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்ட உயர்மட்டக் கூட்டத்திலேயே வடமாகாண ஆளுனர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 394 பேரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையில் இதுவரையில் 1575 குடும்பங்களைச் சேர்ந்த 5220 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இந்த மக்களின் அத்தியாவசிய தேவையாகிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகப் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்தப் பிரதேசத்திற்கென இரண்டு பஸ் வண்டிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெற்செய்கையை இந்த மக்கள் ஆரம்பிப்பதற்கு வசதியாக 6 உழவு இயந்திரங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

துணுக்காய் பிரதேச விவசாய அபிவிருத்திக்கென 14 மில்லியன் ரூபாவும், இந்தப் பகுதிகளில் உள்ள 19 பாடசாலைகளைத் திருத்தி அமைக்கவும், அபிவிருத்தி செய்வதற்குமென 39 மில்லியன் ரூபாவும் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுனர் இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் நாளாந்தம் 3000 (மூவாயிரம்) ஹெக்டேயர்களில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றி வருகின்றது.

துணுக்காயில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார், வடமாகாண சபையின் பிரதம செயலாளர் சிவசுவாமி, துணுக்காய் பிரதேச 65 ஆம் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, முல்லைத்தீவு மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் அத்துல ஜயவர்தன ஆகியோர் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டு, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன், கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக