13 நவம்பர், 2009

பல்கலைக்கழக மாணவி விடுவிக்கப்படாததால் பேராதனையில் தமிழ் மாணவர் பகிஷ்கரிப்பு

புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, கண்டி, பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி ஒருவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவர்கள் விரிவுரைகளை இன்று காலை முதல் பகிஷ்கரித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை 2.15 மணியளவில் விரிவுரை நடந்து கொண்டிருந்த சமயம் பல்கலைக்கழகக் காவலாளி, புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி இம்மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மாணவர்கள் விரிவுரை மண்டபத்தை விட்டு வெளியே வந்த சமயம் புலனாய்வுப் பிரிவினர் அவரை ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் தெரிவித்தனர்.

முதலில் இம்மாணவி பேராதனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள், இதனை அடுத்து அவர் தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரது பொருட்கள், உடைகள் என்பவற்றுடன் அவரை புலனாய்வுப் பிரிவினர், விசாரணைக்காகக் கொழும்பு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

இவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படாதது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக