மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த மிதிவெடிகளை அகற்றும் தன்னியக்க இயந்திரங்கள்
நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை படிப்படியாக துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக திருமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, பகுதிகளுக்கும் கட்டம் கட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். நாமும் எமது சொந்த இடங்களுக்குச் செல்லமாட்டோமா? என ஏங்கித் தவிக்கும் மக்கள் முகாம்களில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களையும் விரைவாக குடியமர்த்துவதுதான் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.
மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு தடையாக இருப்பது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளும் கண்ணிவெடிகளுமே.
மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை இராணுவமும், விசேட அதிரடிப்படையினரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், அதன் வேகம் போதுமானதாக இல்லை. மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படல் வேண்டும்.
இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வடமாகாண அபிவிருத்தி மீள்குடியேற்றத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டிலிருந்து 10 தன்னியக்க மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளார்.
மிக துரிதமாக மேற்படி இயந்திரங்களை இவர்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற காரணத்தினால் விமானங்கள் மூலம் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இதற்கமைய கடந்த 4ஆம் திகதி ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து பொசீனா ரக 5 இயந்திரங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. இவை சுமார் 270 மில்லியன் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தன.
மன்னார் கட்டுக்கரைகுளம் பகுதியில் இன்று இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் மேலும் 5 இயந்திரங்கள் குரேஷியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த 5 இயந்திரங்களும் கடந்த 12ஆம் திகதி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. எம். பி. 4 என அழைக்கப்படும் இயந்திரங்கள் டொகிங் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தன்னியக்க இயந்திரங்களான இவையின் முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாரிய இரும்பு சுத்தியல் (Flail Hammers) நிலத்தை ஓங்கி அடித்து அடித்து முனனேறி மிதிவெடிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன.
நீர் நிலைகள், ஓடைகள், ஏரிகள், வரம்புகள், மரங்களை சூழவுள்ள வேர் பகுதிகள், வீடுகளை சூழவுள்ள பகுதிகள், கட்டடங்களைச் சூழவுள்ள பகுதிகள் போன்ற வற்றில் மிக எளிதாக இயக்க முடியும்.
5 தொன் எடைகொண்ட இயந்திரங்கள் செயின் புளொக் மூலம் நகர்கின்றன. நிலத்தை இறுகப் பற்றியபடி முன்னேறிச்செல்லும் போது அடிப்பாகத்தில் சுமார் 30 சென்றி மீற்றர் கணமுள்ள குண்டு துளைக்காத இரும்பு பிளேட்டுகள் எந்தவிதமான வெடிவிபத்துக்கும் ஈடுகொடுக்கும் ஆற்றலையும் கொண்டதாக உள்ளன.
மணிக்கு 2200 சதுர மீற்றர் பரப்பில் மிதிவெடிகளை அகற்றும் திறன்கொண்ட இந்த இயந்திரங்கள் வடக்கில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு தனது பங்களிப் பைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக