20 செப்டம்பர், 2009

10ஆயிரம் பயிற்சிபெற்ற புலி உறுப்பினர்களின் விபரம் அடங்கிய ஆவணங்கள் குடும்பிமலையில் மீட்பு-

புலிகள் இயக்கத்தில் பயிற்சிபெற்ற 10ஆயிரம் பேரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணக் கோவையொன்றினை மட்டக்களப்பு, குடும்பிமலை நரகமுல்லைப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விபரங்கள், புலிகள் வங்கிகளின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருதொகை பற்றுச்சீட்டுக்கள், தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளிலான சஞ்சிகைகள், புலிகள் இயக்கம் கொழும்பு வர்த்தகர்களுடன் கொண்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான 05ஆவணங்கள் என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நலன்புரி முகாமிற்குள் கொண்டுசெல்ல முயற்சிக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்பு-

வவுனியா மெனிக்பாம் முகாமிற்குள் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ரவைகள் ரி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுத்தக் கூடியவையென படையினர் தெரிவித்துள்ளனர். முகாம்களுக்குள் வெற்றிலை மற்றும் புகையிலை என்பவற்றைக் கொண்டுசெல்லும் முச்சக்கரவண்டி ஒன்றில்வைத்து இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த மீள்வலு சேர்க்கக்கூடிய இரண்டு மின்கலன்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கேகாலை றம்புக்கணையில் வெடிபொருட்கள் மீட்பு-

கேகாலை றம்புக்கணை வெல்கொடவத்தைப் பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவி;த்துள்ளார். பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 04, 8.3மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவைகள் 22 உட்பட மேலும் சில வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அதிகாரி ராதிகா குமாரசுவாமியின் பிரதிநிதியான பற்றிக் கமன் அடுத்தவாரம் இலங்கை விஜயம்-

ஐக்கிய நாடுகள் சபையின் மற்றுமொரு பிரதிநிதி இலங்கைக்கான விஜயமொன்றினை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .நா சபையின் சிரேஸ்ட உயரதிகாரிகளில் ஒருவரான மேஜர்ஜெனரல் பற்றிக் கமன் என்பவரே இலங்கைக்கு வருகை தரவுள்ளார். .நாவின் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி ராதிகா குமாரசுவாமியின் விசேட தூதுவராகவே பற்றிக் கமன் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். இவர் தமது விஜயத்தின்போது வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள சிறுவர்களை நேரில்சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொள்ளவுள்ளாரென்று கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக