20 செப்டம்பர், 2009

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டவுடன் அப்பகுதிகளில் தபால் விநியோகத்தை சீராக நடத்துவதற்குத் திட்டம்-

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டவுடன் அப்பகுதிகளில் தபால் விநியோகத்தை சீராக நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்கள் மீள்குடியேற்றப்பட்டவுடன் அவர்களுக்கான தபால் வசதிகள் செய்து கொடுக்கப்படுமென தபால் மாஅதிபர் பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் ஏற்கனவே செயற்பட்ட தபால் நிலையங்களைத் திறக்கவும், சேதமடைந்த தபால் நிலையங்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தபால் அதிபர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு முன்னரைப் போன்றே தபால் சேவையை நடத்தமுடியும் என்றும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வடபகுதியிலுள்ள அரச அதிகாரிகளால் பாதுகாப்புக்கு உகந்தது என சிபார்சு செய்யப்படும் பகுதிகளில் தபாலகங்கள் இயங்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களிலிருந்து 1000குடும்பங்கள் மீள்குடியமர்வு-

வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 1000குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கென இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓமந்தை, நொச்சிமோட்டை, கந்தசாமிநகர் உள்ளிட்ட 32 கிராமங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இம்மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வானது வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச எம்.பி தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளமை இங்கு குறி;ப்பிடத்தக்கது.

அன்பான இணையத்தள வாசகர்களே


அன்பான புதியபாதை வாசகர்களே எமது
இணையத்தள முகவரியை உங்கள்
நண்பர்களுக்கும் தெரியபடுத்துமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எமது முகவரி
http://puthiyapathai.com
நன்றி


தெகிவளை, மெல்பேர்ட் கிறசென்ட் பிரதேசத்திலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு-

கொழும்பு தெகிவளை பிரதேசத்திலிருந்து ஒருதொகை ஆயுதங்களைப் பாதுகாப்புப் பிரிவினர் நேற்றையதினம் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலினைத் தொடர்ந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் டெட்னேற்றர்கள் 43, ரிமோட் கொன்றோலர் 01, ரிசீவர் 01, டைமர் 08, கன்வாஸ் பெல்ட் 01, பூஸ்டர் 04 என்பன அடங்குவதாகவும், இந்த ஆயுதங்கள் மிகவும் இரகசியமான முறையில் தெகிவளை மெல்பேர்ட் கிறசென்ட் பிரதேச்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக