மட்டக்களப்பில் சர்வ மதத் தலைவர்களின் 3 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று ஆரம்பம்
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சர்வோதய ஒன்று கூடல் மண்டபத்தில் சர்வ மதத் தலைவர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ளும் 3 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.
நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன தலைமையில் நேற்று மாலை இப்பயிற்சிப் பட்டறை வைபவ ரீதியாக சர்வ மத தலைவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் பேரருட்திரு கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மானந்தாஜி, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, மௌலவி ஐ.எம்.இலியாஸ் ஆகியோர் மங்கள தீபம் ஏற்றி இதனை ஆரம்பித்து வைத்தனர்.
குறிப்பாக இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காக தெற்கிலிருந்து 50இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார்களும் வருகை தந்திருந்தனர்.
நேற்று மாலை ஆரம்பமான இப்பயிற்சிப் பட்டறை நாளை மாலையுடன் நிறைவு பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
"தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சாத்வீக வழியிலும், ஆயுத போராட்டத்திலும் தோல்வியடைந்துள்ள நிலையில் சரியான தீர்வொன்று அம்மக்களுக்குக் கிடைக்க வேண்டும்
இந்தக் கோரிக்கையை தெற்கு மக்கள் ஊடாகவே அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டியிருக்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கு மக்களையும் இதில் இணைத்துக் கொள்வதன் மூலமே இனங்களிடையே ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உறுதிப்படுத்த முடியும்.
இதுவே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்" என இதில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக