17 செப்டம்பர், 2009

ஐ.நா. விசேட பிரதிநிதி கொழும்பு வருகை: இன்று வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்கிறார்


ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கொழும்பு வந்தடைந்துள்ளார். இங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்து போருக்கு பின்னரான சூழல் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இன்று வியாழக்கிழமை அவர் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு செல்லவுள்ளார். போருக்கு பிறகான நிலைமைகள் குறித்தும் இதர மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் அவர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஐ.நா.வின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் விரைவான ஒரு நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.

லின் பாஸ்கோ வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பருவ மழை காலத்தின் போது அங்குள்ள தங்கும் வசதிகள் குறித்து உதவி வழங்கும் நிறுவனங்கள் பெரும் கவலையடைந்துள்ளன. மேலும் போர் இடம்பெற்ற காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஒரு விசாரணை குறித்தும் அவர் இலங்கை அரசுடன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான விசாரணைகள் குறித்து முன்னர் எழுந்த சர்வதேச கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளியது. அவருடன் பரந்துபட்ட அளவில் ஆலோசனைகளை நடத்தவுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருந்தாலும் அதில் மனித உரிமைகள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக