17 செப்டம்பர், 2009

அம்பாறையில் இன்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப் படையால் நிலைமை சீரடைந்தது


அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று காலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் கற்கள் மற்றும் மண் குவிக்கப்பட்டும் ஒரு குழுவினரால் போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் விசேட அதிரடிப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள் இவற்றை அகற்றியதால் நிலைமை சீரடைந்தது.

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களே இந்த போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக காலையில் அக்கரைப்பற்று - கல்முனை வீதி, சம்மாந்துறை - நாவிதன்வெளி வீதி, அக்கரைப்பற்று - பொத்துவில் வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.

இருப்பினும பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இ.போ.ச. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் திருக்கோவில் ஊடாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதை ஒரு குழுவினர் தடுத்து வருவதாகவும் இதனையடுத்தே இச்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக