3 செப்டம்பர், 2009

வவுனியாவில் அதிகரித்து வரும் சோதனை

நடவடிக்கைள்





வவுனியா நகரிலும், நகரைச் சூழ்ந்த பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நகர வீதிகளில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பன வீதித்தடை முகாம்களில் மறித்து சோதனையிடப்படுகின்றன. அத்துடன் சைக்கிள்களில் செல்வோரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், அந்த சைக்கிள்களின் இலக்கங்களும் பொலிசாரினால் சில வேளைகளில் பதிவு செய்யப்படுகின்றன.

சோதனைக்கு உள்ளாக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்படுவதுடன், மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணங்களும் சாரதி அனுமதிப்பத்திரமும் பொலிசாரினால் பரிசீலனை செய்யப்படுகின்றன.

நகரத்தின் முக்கிய வீதிகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகின்ற காலை, மாலை வேளைகளில் முக்கிய சந்திகளில் ஏராளமான போக்குவரத்துப் பிரிவுப் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் கண்காணிக்கப்படுகின்றன. அதேவேளை, பிரதான வீதிகளில் பத்தடிக்கு ஒரு பொலிசார் என்ற வீதத்தில் கடமையில் நிறுத்தப்படுகின்றார்கள்.

நகரத்தைச் சூழவுள்ள புறநகர்ப்பகுதி குடியிருப்புக்களிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பட்டுள்ளன. கிராமங்களுக்குச் செல்லும் இராணுவத்தினரும் பொலிசாரும் வீடுகளுக்குச் சென்று, குடும்ப அட்டையைப் பெற்று, அதற்கமைய அங்கு குடும்பத்தினர் உள்ளனரா எனப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து தப்பியவர்கள் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் மறைந்திருக்கின்றார்களா என்பதைக் கண்டறிவதற்காகவே வீடுகள் சோதனையிடப்படுவதாகக் கூறப்படுகின்றது.

எனினும் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் குறித்து பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக