30 டிசம்பர், 2009

பதிவுச்சான்று கோரவேண்டாமென
பொலிசாருக்கு கண்டிப்பான உத்தரவு
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அறிவிப்பு
அவசர அலுவல்களின் நிமித்தம் கொழும்புக்கு வருபவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தல்களை அனுப்புவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான நிமல் மெதிவக தெரிவித்தார்.

பதிவுநீக்கம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதிப் பொலிஸ் மாஅதிபர், ஒருமாதம் வரையிலான குறுகிய காலம் கொழும்பில் தங்கியிருப்பதற்குப் பொலிஸில் பதியவேண்டுமென்ற நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு அமைய, அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

முன்பு, மலையக இளைஞர், யுவதிகள் கொழும்புக்கு வருவதற்குப் பொலிஸ் பதிவு நீக்கப்பட வேண்டுமென மலையகக் கட்சிகள் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. அதன்பின்னர், அவசர அலுவல்கள் காரணமாகவோ, உறவினர், நண்பர்களைப் பார்ப்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கொழும்பில் வந்து தங்குபவர்கள் பொலிஸில் பதியவேண்டிய அவசியம் இல்லையென அரசாங்கம் அறிவித்தது.

ஆனால், சில பொலிஸ் நிலையங்களில் முறையான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி பொலிஸ் பதிவு கோரப்பட்டதாகத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. எனினும், இவை உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எனப் பொலிஸ் மாஅதிபர் மெதிவக தெரிவித்தார்.



2012 முதல் கொழும்பில் இருந்து பளை வரையிலான
ரயில் சேவைகள் மீள ஆரம்பிப்பு
இந்திய

அரசாங்கத்தின்

கத்தின் 140 மில்லியன் ரூபா கடனுதவியுடனும் ஓமந்தையில் இருந்து பளை ரையான 96 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகளை மீளமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார். இந்தியக் கம்பனியொன்றினூடாக ரயில் பாதைகள் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதுதொடர்பான ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் 30 மாதங்களில் ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதைகள் முழுமையாக நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பளையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளை சீன அரசின் உதவியுடன் முன்னெடுப்பது குறித்து பேச்சு நடத்தப்படும் எனவும் பொது முகாமையாளர் கூறினார்.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஓமந்தை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரை 28 ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலைய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணிகளுடன் இணைந்ததாக ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொது முகாமையாளர் கூறினார். ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பொறுப்புகளை அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனியார் துறையினர் பொறுப்பேற்றுள்ளனர். இதுதவிர வடக்கின் தோழன் திட்டத்தினூடாகவும் நிதி திரட்டப்படுகிறது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 4 ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, யாழ்தேவி, உத்தரதேவி ஆகிய பயணிகள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, ஒரு எரிபொருள் ரயிலும் ஒரு சரக்கு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ரயில்களை இந்தியாவில் இருந்து தருவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் கூறினார்.

பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் முழுமையாக நாசமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வட பகுதிக்கான ரயில் சேவைகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


யாழ்குடாவில் பாண் மற்றும் பெற்றோல் விலைகள் குறைப்பு

அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை குறைத்ததையடுத்து யாழ்குடாவில் பாண் மற்றும் பெற்றோல் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

பாண் விலைகள் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (30) முதல் பெற்றோல் விலைகள் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடபகுதிக்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த காலங்களில் யாழ்குடாவில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் தென்பகுதியiவிட அதிக விலைக்கே விற்கப்பட்டன. ஏ-9 பாதை திறக்கப்பட்டதையடுத்து யாழ்குடாவிலுள்ள மக்களுக்கு தென்பகுதி விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாகவும் அரச அதிபர் கூறினார்.

யாழ்குடாவில் ஒரு இறாத்தல் பாண் 43 ரூபாவுக்கு விற்கப்பட்டதோடு தற்பொழுது 36 ரூபாவுக்கு பாண் விற்கப்படுகிறது. இதுதவிர பாண் சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

யாழ்குடாவில் சகல பொருட்களும் தட்டுப்பாடின்றிக் காணப்படுவதாகவும் வடபகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திப் பொருட்கள் தென்பகுதிக்குத் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதப் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டதையடுத்து வடபகுதிக்கான போக்குவரத்துச் சேவைகள் தடையின்றி இடம்பெறுவதோடு யாழ் பகுதி மக்கள் ஏனைய பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் சென்றுவர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ-9 வீதி திறக்கப்பட்டதையடுத்து பெருமளவிலான தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக அரச அதிபர் குறிப்பிட்டார். இதனால் யாழ்ப்பாணத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக