27 டிசம்பர், 2009

அமெரிக்காவில் அல் காய்தா பயங்கரவாதி கைது: வெடிமருந்து மூலம் நடுவானில் விமானத்தை தகர்க்க சதி




வெடி பொருள் கொண்டு தகர்க்க முயன்ற அமெரிக்க விமானம். டெட்ராய்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அதை சோதனையிட செல்லும் போலீஸôர்.
வாஷிங்டன், டிச. 26: அமெரிக்க விமானத்தை வெடிபொருள் வைத்து நடுவானில் தகர்க்க முயன்ற அல் காய்தா பயங்கரவாதியை பயணிகள் மடக்கிப் பிடித்தனர்.

இந்த விமானம் சனிக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரிலிருந்து 278 பயணிகளுடன் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்க மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சதி தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அதிர்ஷ்டவசமாக பயங்கரவாதி மடக்கிப் பிடிக்கப்பட்டான் என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.

பிடிபட்ட அல் காய்தா பயங்கரவாதி உமர் பாரூக் அப்துல் முதாலாப் நைஜீரியாவைச் சேர்ந்தவர். லண்டனில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.

நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு ஆமஸ்டர்டம் நகரிலிருந்து அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்குப் புறப்பட்டது. விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்குவதற்கு 25 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு இருக்கையில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தத்துடன் புகை வந்தது. அருகில் இருந்த பயணிகள் பீதி அடைந்து விமான பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த இருக்கையில் இருந்த இளைஞர், தான் வைத்திருந்த வெடி மருந்துக்கு நெருப்புவைக்க முயன்றது தெரியவந்தது. அருகில் இருந்த பயணிகளும் விமானப் பயணியாளர்களும் அவரை மடக்கிப் பிடித்து நெருப்பை அணைத்தனர்.

வெடி மருந்தை வெடிக்க வைப்பதற்காக அவன் வைத்திருந்த கருவி குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வேலை செய்யாததால் பெரும் நாசம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நெருப்பு காரணமாக அந்த பயங்கரவாத இளைஞனும் அருகில் இருந்த 2 பயணிகளுக்கும் சிறிது காயம் ஏற்பட்டது.

விமான ஓட்டி அந்த நபரைப் பிடித்து விமானத்தின் முன்பகுதிக்கு கொண்டு சென்றார். பின்னர் விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கிய உடன் தனியாக நிறுத்தப்பட்டது. விமானத்தை போலீஸôர் சுற்றி வளைத்தனர். பின்னர் வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்தனர். அந்த பயங்கரவாத இளைஞன் கைது செய்யப்பட்டான்.÷

அவன் வைத்திருந்த வெடிமருந்து திரவமாகவும் திடப் பொருளும் கலந்ததாக இருந்தது. அதை வெடிக்க வைக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் பலர் உயிர் தப்பினர் என்று அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த இளைஞன் தனது காலில் வெடி மருந்தை மறைத்து வைத்திருந்தான். ஒரு ஊசி மூலம் அதை ரசாயனத்துடன் கலந்து வெடிக்க வைக்க முயன்றுள்ளான்.

பிடிபட்ட பயங்கரவாதிக்கு ஏற்பட்ட தீ காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் மருத்துவமனையிலேயே விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விமானம் நைஜீரியாவிலிருந்து ஆம்ஸ்டர்டம் நகரில் தரையிறங்கி பின்னர் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டதாக தெரிகிறது.

அல் காய்தா பயங்கரவாதி அமர்ந்திருந்த இருக்கைக்கு 3 வரிசைக்கு முன்பு அமர்ந்திருந்த சையத் ஜாப்ரி இதுகுறித்து கூறும்போது, பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் வந்தது. நெருப்பு புகை வந்து திரும்பியபோது அவனை பலர் மடக்கி பிடித்துக் கொண்டிருந்தனர் என்றார்.

இதற்கிடையே பிடிபட்ட பயங்கரவாதி லண்டனில் பொறியியல் படிப்பு படித்து வருவதாக தெரிய வந்துள்ளதால் லண்டன் போலீஸôர் அது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் சர்வதேச வர்த்தக மையம் மீது விமானத்தை மோதி அல் காய்தா தீவிரவாதிகள் தாக்குல் நடத்தினர். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர

தாக்குதலுக்குப் பின் அந்த நாட்டில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும் எல்லா விமானங்களிலும் பலத்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் நைஜீரியா இளைஞர் வெடி மருந்து எடுத்துச் சென்றதை கண்டுபிடிக்க முடியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக