புளொட் அமைப்பும் வவுனியா நகரசபையும் இணைந்து வவுனியாவில் பாரிய சிரமதானம்-
வவுனியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வவுனியா கோவில்குளத்தில் இன்று பாரிய சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. புளொட் அமைப்பினரும் வவுனியா நகரசபையினரும் இணைந்தே பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதன் ஆரம்ப நிகழ்வு கோவில்குளம் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த நூலகத்தில், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமாகிய ஜி.ரீ.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபையின் உபதலைவர் என்.எம்.ரதன், எஸ்.சுரேந்திரன். இ.சிவக்குமார், கே.பார்த்திபன்,
எஸ்குமாரசாமி மற்றும் புளொட்டின் வன்னிப்பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வை.பாலச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் இதுவரையில் 18பேர் டெங்கு நோய்க்குப் பலியாகியுள்ளதாகவும், 700ற்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் காரணமாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் வேகமாக ஆட்களைப் பலிகொண்டு வரும் இந்த ஆட்கொல்லி நோயைக் கட்டுப்படுத்தி உயிரிழப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இங்கு உரையாற்றிய அனைவரும் ஒருமுகமாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவிக்கு விஜயம்- புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தாhர்த்தன் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவின் மல்லாவிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர். இவ்விஜயத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தனுடன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட்டின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் சென்றிருந்தனர். இதன்போது புளொட் பிரதிநிதிகள், மல்லாவியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளை சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதுடன்,
அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தனர். அவர்களுடைய குறைகளும், ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய குறைகளைப் போலவே போக்குவரத்து, வீட்டு வசதி, சுகாதாரம் போன்ற குறைபாடுகளாக இருக்கக் காணப்பட்டன. அத்துடன் தங்களுடைய விவசாய உபகரணங்கள், உழவு இயந்திரங்கள், உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் யாவும் முல்லைத்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவற்றை மீளவும் தங்களுக்குப் பெற்றுத் தருமாறும் அம்மக்கள் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மீளமைக்கவும், வியாபார ஸ்தாபனங்களை மீளக் கட்டுவதற்கும் உதவிகளைப் பெற்றுத்தருமாறும் கேட்டுக் கொண்டனர்.
இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள், இங்கிருக்கின்ற சிரமங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக அரசாங்க உயர்மட்டத்தினருக்கு எடுத்துக் கூறி, மிக விரைவில் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளனர். இதேவேளை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவி பகுதியில் சிறுசிறு வர்த்தக நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஆரம்பத்தினைக் காணக்கூடியதாக இருந்ததாக புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக