ஃபொன்சேகா அதிபரானால் விக்ரமசிங்கேதான் பிரதமர்: இலங்கை கூட்டணி கட்சி அறிவிப்பு
Last Updated :
இலங்கை அதிபர் தேர்தலில் ராணுவ முன்னாள் தளபதி சரத் ஃபொன்சேகா வெற்றி பெற்றால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்படுவார் என இலங்கை சுதந்திர மகாஜன கட்சி தெரிவித்துள்ளது. சரத் ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முழு சம்மதத்தை தமது கட்சியின் உயர் நிலைக் குழு தெரிவித்துவிட்டதாகவும் அக்கட்சியின் தலைவர் மங்கள சமரவீர கூறினார். வதந்திகளை கிளப்பிவிடுகிறார்: சரத் ஃபொன்சேகா குறித்து மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு ஏராளமான வதந்திகளை கிளப்பிவிடுகிறது. சரத் ஃபொன்சேகா அதிபரானால் இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்படும் என்பது அதில் ஒன்று. உண்மையை சொல்ல வேண்டுமானால் மகிந்த ராஜபட்ச அரசுதான் அடிப்படையில் ராணுவ ஆட்சி போன்று உள்ளது. ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்ற 24 உயர் அதிகாரிகளை ராஜபட்ச தனது நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார். இலங்கையின் அதிபராவதற்கு சரத் ஃபொன்சேகாவிற்கு அனைத்து தகுதிகளும், திறமையும் உண்டு என்றார் சமரவீர. இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஐக்கிய தேசிய கூட்டணி என்ற புதிய கூட்டணி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இதில் இலங்கை சுதந்திர மகாஜன கட்சி உள்பட 18 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொதுவான வேட்பாளராக நிறுத்தப்படும் சரத் ஃபொன்சேகாவுக்கு இந்தக் கூட்டணி ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க புளொட் தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகாரப்பகிர்வு என்பனவாகும். கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார். நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்கு தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அவற்றைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது. இப்போது யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் ஒரு நியாயமான தீர்வொன்றை நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சிநிரல் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக் கூடாது. இதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
புத்தள வானூர்தி விபத்து தொடர்பில் ஆராயவென விசேடகுழு நியமனம்-
மொனறாகலை புத்தள துன்கிந்த காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான எம்.ஐ. 24ரக ஹெலிகொப்டர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் தமது நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆராய்வதற்கு விமானப்படையைச் சேர்ந்த 20பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது. புத்தள பகுதியில் நேற்றுபிற்பகல் 1.30அளவில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 24ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதுடன் அதில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தானது ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பலியான நால்வரின் சடலங்கள் பரிசோதனைகளுக்காக மடல்கும்புற வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக