28 நவம்பர், 2009

தேர்தல் கண்காணிப்புப் பணியில் சர்வதேச தரப்பினர் : ஆணையாளர் உறுதி என கரு தகவல்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உறுதியளித்துள்ளார் என கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நீதி நியாயமாக நடத்துவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம் குறித்து தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் நேற்று சந்தித்து வலியுறுத்தினர். இதன்போதே இதற்கான இணக்கத்தினை தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர உள்ளிட்ட முன்னணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கரு ஜயசூரிய எம்.பி. கூறியதாவது :

"தேர்தல்கள் ஆணையாளருடனான எமது இன்றைய சந்திப்பானது நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே நடைபெற்றது.

நடைபெறவிருக்கும் தேர்தலில் நாட்டு மக்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கும் தமக்கு விருப்பமான வரும் நாட்டுக்குத் தலைமைத்துவத்தை நேர்மையாகப் பெற்றுக் கொடுக்கின்றவருமான தலைவர் ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இதனை மையமாகக் கொண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தேர்தல் சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஏனெனில் கடந்த சகல தேர்தல்களின்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டிருந்ததையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நாம் கண்டிருந்தோம். எனவே இந்த நிலைமை ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, பொதுத் தேர்தலிலும் சரி மாற்றியமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது.

அரச சொத்துக்கள், அரச ஊடகங்கள் முழுமையாக அரச தப்பினரால் உபயோகிக்கப்பட்டமை மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அநாவசியமாக ஹெலிகொப்டர்கள் கூட பயன்படுத்தப்பட்டிருந்தன. இது மேலும் தொடர முடியாது.

அரசுடைமைகள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டுமானால் அதற்கான செலவுகளையும் பொறுப்பெடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

தேர்தல் பணிகள் ஆரம்பித்துவிட்ட இக்காலப் பகுதிகளில் அநாவசிய இடமாற்றங்களுக்கு இடமளிக்கக்கூடாது. அத்துடன் புதிதாக நியமனம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற விடயங்களுக்கு முற்றாக தடை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குதல், வங்கிக் கடன் வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் நிறுத்தப்பட வேண்டும்.

இவையனைத்தும் கடந்த காலங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று நடவடிக்கைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

அரச ஊடகம்

அரச ஊடகம் என்பது இந்நாட்டு மக்களுக்கு சொந்தமானது. எனவே அரச ஊடகம் மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இதனூடாக ஒரு தரப்புக்கு மாத்திரமே இடமளிக்காது எதிர்த் தரப்பினருக்கும் இதில் வாய்ப்பளித்து அதற்கான நேர காலத்தை ஒதுக்கித் தர வேண்டும்.

தற்போது அரச ஊடகங்களில் எதிர்க் கட்சிகளை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும்.

கண்காணிப்பாளர்கள்

தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கென சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் நாம் தேர்தல்கள் ஆணையாளருக்கு வலியுறுத்தியுள்ளோம். அந்த வகையில் பொதுநலவாய நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகிய தரப்புக்களில் இருந்து கண்காணிப்பாளர்களை இங்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க எமக்கு உறுதியளித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர்

இடம்பெயர்ந்த வன்னி மக்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாது துன்பப்படுகின்றனர். ஆனால் இவர்களை சென்று பார்ப்பதற்குக்கூட எதிர்த் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இப்பகுதிகளுக்குச் சென்று பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிலையை உருவாக்கித் தருமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

பொலிஸ் துறை பொலிஸ் துறையில் நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர். அதேபோல் அரசாங்கத்திற்குச் சார்பாக செயற்படுகின்ற அதிகாரிகளும் இருக்கின்றனர். எனினும் நாம் பொலிஸார் குறித்து விமர்சிக்கவில்லை.

கடந்த காலத் தேர்தல்களின்போதும் தற்போதும் பொலிஸார் பல்வேறு அழுத்தங்களின் நிமித்தமாகவே இவ்வாறு நடந்து கொள்வதற்கான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை எம்மால் உணர முடிகின்றது. இவ்விடயத்தில் முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் பொலிஸ் மா அதிபர் கூடுதல் அக்கறை செலுத்துமாறும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

வாக்குரிமை

இறுதியாக வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமையாகும். நடைபெற்று முடிந்த தேர்தல்களில் மக்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக பாவிப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் மோசடிகள் இடம்பெற்றன. இது தவிர்க்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள வாக்காளர் சட்டமூலம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு எதிர்த் தரப்பினாகிய நாமும் முழு ஆதரவு தரக் காத்திருக்கிறோம். இதன் மூலமே இந்நாட்டில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் ஏற்படும் என்பதையும் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்."

இவ்வாறு கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக