5 நவம்பர், 2009

சிகிச்சைக்காக இராணுவத்தினர் அழைத்துச் சென்ற மனைவியைத் தேடித் தருமாறு கணவர் கோரிக்கை


- தனது மனைவி இராணுவத்தினரால் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற பின்பு அவர் இருக்குமிடம் தெரியாதுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடந்த கடுஞ்சமரின் போது, பதுங்கு குழியில் பாதுகாப்பு கருதி இருந்த வேளை, அவர் காயமடைந்தார். அச்சமயம் இராணுவத்தினர் அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அவரைக் கண்டுபிடிப்பதற்கு அவரது கணவர் சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார். இது தொடர்பாக சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

தற்போது அவர் வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில், அம்மன்கோவில் வீதி, சாம்பல் தோட்டத்தி்ல் இருக்கின்றார். அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கிளிநொச்சி டிப்போ சந்தி ஐந்து வீட்டுத் திட்டத்தில் நான் எனது மனைவி வேணி என்றழைக்கப்படும் அருந்ததி, எனது மகன் அனுஜனுடன் வாழ்ந்து வந்தேன். ஷெல் தாக்குதல்கள் விமான தாக்குதல் நிலைமைகள் காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்து பல இடங்களுக்கும் சென்று இறுதியாக முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பிள்ளையார் கோவிலில் தஞ்சமடைந்திருந்தோம்.

அந்தப் பகுதியில் நடைபெற்ற கடுஞ்சமர் காரணமாக, பதுங்கு குழியில் நாங்கள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி எனது மனைவி தலையில் காயமடைந்தார். அடுத்தநாள் காலை அவரை நாங்கள் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். ஆயினும் அந்தப் பகுதியில் இடம்பெற்ற கடும் மோதல்கள் காரணமாக அவரை மாத்தளனில் இருந்த எனது மாமியார் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு தங்கியிருந்தோம்.

மறுநாள் எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துசேர்ந்தோம். இராணுவத்தினர் எங்களை கைவேலி பாடசாலைக்கு அழைத்துச் சென்று, என்னையும் காயமடைந்த எனது மனைவியையும் வைத்துக்கொண்டு எனது குழந்தையை எனது மாமியார் குடும்பத்தினருடன் ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர், எனது மனைவியை சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு ஹெலிக்கொப்டரில் கொண்டு சென்றார்கள். பெயர் விபரங்கள் எதனையும் எடுக்கவில்லை.

என்னை ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். நான் எனது மாமியார் குடும்பத்துடன் இணைந்துகொண்டேன். அங்கிருந்து மனிக்பாம் ஸோன் 4 முகாமுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த மாதம் 26 ஆம் திகதி எங்களை முகாமில் இருந்து விடுதலை செய்தார்கள்.

அதன் பின்னர் எனது மனைவியை, செட்டிகுளம், வவுனியா, வைத்தியசாலைகளிலும், பூந்தோட்டம் உட்பட பல முகாம்களிலும் புல்மோட்டை, கண்டி, அனுராதபுரம் என பல இடங்களிலும் தேடினோம். ஆனால் எனது மனைவியைக் காணவில்லை. எனவே எனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக