அடுத்து நடைபெறும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா என்ற கேள்விக்கும் எதிர்க்கட்சி சார்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் உறுதியான பதில் கிடைக்காதபோதும் 2010 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன.
முதலில் நடத்துவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது பற்றி கருத்தறிவதற்காக அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை கேட்டுள்ளார். கட்சிகளின் தலைவர்கள் பலரும் ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜனாதிபதியின் ஆலோகர் வாசுதேவ நாணயக்கார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக அணியின் தலைவர் எம்.எச்.முகமது ஆகியோர் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவது நல்லது எனத் தெரிவித்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியூன் ஆகியோர் பொது தேர்தலை முதலில் வைப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.
கட்சித் தலைவர்களின் கருத்தை அறிந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த, தேர்தல் பற்றிய தீர்மானம் எடுக்குமுன் அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சு நடத்தப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளை அமைக்கும் வேலை தீவிரமாக நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் வடக்கில் சுதந்திரக் கட்சி கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும்; மேற்கொள்ளப்படுகின்றன. இவை எல்லாம் பார்க்கும்போது ஜனாதிபதி தேர்தல் 2010 ஜனவரியில் நடைபெறுவற்கான அறிகுறியாக இவற்றைக் கருதலாம்.
யுத்தத்தால் இடம் பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் 2010 ஜனவரிக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வன்னியில் நடைபெறும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் அவதானிக்கும்போது 2010 ஜனவரி; ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பெரும்பாலான இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெறும் எனத் தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெற்றால் அதை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அதேவேளை தேர்தலை எதிர்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் வியூகம் வகுக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் அதுபற்றி கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அங்கம் வகிப்பதாகவும் வேறு கட்சிகளும் இந்தக் கூட்டமைப்பில் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டில் புதிய கட்சிகளை சேர்க்;கும் முயற்சிகள் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளுக்கும் நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான எந்த யோசனையையும் இதுவரை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலோ அல்லது மக்கள் முன்னோ தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டில் இணைவதாக கூறும் கட்சிகள் ஒற்றையாட்சிக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பூமிபுத்திரர்களுக்கு அதாவது சிங்கள மக்களுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. இக்கருத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அவர்கள் கருத்து அங்கு எடுபடவில்லை.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் மாத்திரமல்ல ஐரோப்பிய நாடுகளும் குறியாக உள்ளன. இலங்கையில் சீனாவும் இந்தியாவும் வலுவாக காலூன்றுவதையும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் செல்வாக்கு இலங்கையில் குறைந்து வருவதையும் அவதானிக்கமுடிகிறது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியாவும் தென்பகுதிகளில் சீனாவும் காலூன்றியுள்ளன.
புலிகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுடன் முரண்பட்டுக் கொண்டதுடன் அந்நாடுகளின் பகை நாடுகளுடன் கூடிய உறவுகளை வைத்துக்கொண்டுள்ளது இதனாலேயே ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசின்மேல் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியும் இலங்கை அரசை அடிபணிய வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஜீ.எஸ்.பி. சலுகையை இல்லாமல் செய்யப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்து வருவது இலங்கைக்கு பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் ஒரு அங்கமாகவே கருதவேண்டும். ஜீ.எஸ்.பி சலுகை தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், ஜீ.எஸ்.பி சலுகை நிறுத்தப்பட்டாலும் முழுநாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையாது. அந்த சலுகை இல்லாமலேயே முன்னேறிச் செல்வதற்கான தயார் நிலைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளுடனான பகை இலங்கையை பேராபத்தில் தள்ளிவிடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யுத்த வெற்றிகள் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவது எதிர்கட்சிகளுக்கு விருப்பம் இல்லை. முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அரசு நடத்துமானால் ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் என ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுவின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை நோக்கி அரசாங்கமும், எதிர்கட்சிகளும் சிறுபான்மை இனங்களை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கைளையும் ஆரம்;பித்துள்ளன. சிறுபான்மை இனங்கள் இவர்களிடம் எதிர்பார்ப்பது இனப்பிரச்சினைக்காக இவர்கள் என்ன அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்கள்; என்பதேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக