5 நவம்பர், 2009

எல்லா உதவிகளையும் அரசு உங்களுக்குச் செய்யும்: வன்னி மக்கள் மத்தியில் ஜனாதிபதி



(பட இணைப்பு)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திடீர் விஜயமாக நேற்று புதன்கிழமை வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பியுள்ளார்.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், மோசமான யுத்தம் நடைபெற்ற அந்தப் பகுதிக்கு முதல் முறையாக அவர் சென்றுள்ளார்.

அந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் அபிவிருத்தி வேலைகளையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். அத்துடன் மீள்குடியேறுவதற்காக செவ்வாய்க்கிழமை அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மக்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டு துணுக்காய் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 1200 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில்,

"யுத்தம் காரணமாக ஏற்பட்டிருந்த கஷ்டகாலம் முடிவடைந்து, புதிய வாழ்க்கையைத் தொடங்கும் காலம் வந்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்

. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மத்தியிலும் அவர் உரையாற்றினார். துணுக்காய் பிரதேசத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர் தமிழில் உரையாற்றியபோது மேலும் தெரிவித்ததாவது:

"நீங்கள் எல்லோரும் நீண்ட காலமாக அனுபவித்து வந்த கஷ்டங்கள் ஏராளம். அதை நான் நன்றாக அறிவேன். பயங்கரவாதிகள் உங்களைத் தவறான வழியில் கொண்டு சென்றார்கள். அது பெரிய பாவம், அநியாயம். நீங்கள் மனித கேடயங்களாகப் பணயக் கைதிகளாக ஆக்கப்பட்டிருந்தீர்கள்.அந்த கஷ்ட காலம் இனிமேல் இல்லை.

புதிய வாழ்க்கை வாழ வேண்டும். அதற்காக நாங்கள் செயற்படுகின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லோரையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு. அது எனது கடமை. நான் அதை நிச்சயமாகச் செய்வேன். இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் பயமும் சந்தேகமும் இன்றி பாதுகாப்பாக வாழ வேண்டும். எல்லோரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் எடுபடாத வகையில் செயற்பட வேண்டும்.

இனிமேல் நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். இந்த நிலைமையை நீங்கள் பாதுகாக்க வேண்டும். நான் உங்கள் தோழன். நான் உங்கள் சொந்தக்காரன். நீங்கள் என்னை நம்பலாம். எமது அரசாங்கம் உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யும். நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். இந்த அழகிய தேசத்தை ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்புவோம்." இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, புதிய பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய உட்பட பல முக்கிய உயரதிகாரிகளும் சென்றிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி புனரமைக்கப்பட்டு வரும் முழங்காவில் வைத்தியசாலையையும், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டேனிஷ் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களையும் சந்தித்து கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றும் படையினர் மத்தியில் உரையாற்றுகையில், யுத்தத்தின்போது இராணுவத்தினர் காட்டிய தீரத்தையும் உறுதியையும் பாராட்டியதுடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்களது சம்பளம் உயர்த்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக