23 நவம்பர், 2009

பாதுகாப்பு வீரர்களுக்கான ‘ரணஜயபுர’
நேற்று ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

1500 வீடுகளுடன் சகல வசதிகளும் உள்ளடக்கம்

அநுராதபுர இப்பலோகமவில் அரசாங்கத்தால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ‘ரணஜயபுர’ வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து படையினர்களிடம் கையளித்தார்.

180 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணியில் சகல வசதிகளையும் கொண்ட 1509 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

புதிய வீடுகளுடன் மருத்துவ நிலையம், சிறுவர் பாடசாலை, வங்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அழகிய அமைதி சூழ்ந்த பிரதேசத்தில் இவ்வீடுகள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முற்பகல் மேற்படி ‘ரண ஜயபுர’ வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை வீரர்களின் பிள்ளைகளால் வரவேற்கப்பட்டார்.

முப்படைத் தளபதிகள் மற்றும் படை உயரதிகாரிகளுடன் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, அநுர பிரிய தர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, மிலிந்தமொரகொட ரஞ்சித் சியம்பலாபிடிய, உட்பட அமைச்சர்கள், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

படைவீரர்களுக்கான இவ்வீடமைப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரணஜயபுர பாடசாலையைக் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.

இலங்கை வங்கிக் கிளையை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடியவும் சுகாதார மத்திய நிலையத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், கார்கில்ஸ் பூட்சிட்டி நிறுவனத்தை வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கவும், சிறுவர் பாடசாலையை ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக