16 அக்டோபர், 2009

முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் அவலம், மாரிக்கு முன்னதாக மீள்குடியேற்றப்படாவிடின் சீரழிவு அபாயம்-

நாடு திரும்பிய தமிழக நா.உ.க்கள் குழு அறிக்கை- அண்மையில் இங்கு விஜயம்செய்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழக முதலமைச்சரிடம் அறிக்கையொன்றை கையளித்துள்ளது. அவ்வறிக்கையில், ~போரின்போது இடம்பெயர்ந்த சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வவுனியா செட்டிகுளம் பகுதியில் முகாம்களில் முள்வேலிகள் அமைக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு சுகாதாரம், குடிநீர் மிக மோசமான நிலையிலுள்ளது. தொற்றுநோய்கள், உணவுத்தட்டுப்பாடு பரவலாகவுள்ளது. இந்நிலையில் மாரி மழை பெய்ய ஆரம்பித்தால் அங்கு உயிர்வாழ முடியாது. பெரும் சீரழிவுகளை அந்த மக்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். மாற்று உடைகள் இன்றியும் போதிய தண்ணீர் இன்றியும் தாங்கள் மிகவும் கஸ்டப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தார்கள். அதை நாம் நேரடியாகவும் காணமுடிந்தது. தங்களை தங்களின் சொந்த இடங்களுக்கு சென்று குடியேற அனுமதித்தாலே போதும் என அந்த மக்கள் மன்றாடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாமிலுள்ள மக்களின் நிலை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ, மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளற்ற, அகற்றப்பட்ட பகுதிகளில் மக்களை படிப்படியாக குடியேற்றி வருவதாவும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தாங்கள் கூடிய கவனம் செலுத்துவதாகவும் அரச தரப்பு தெரிவித்தாகவும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் தூதுக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக