புலம்பெயர்நாட்டு தமிழ் மக்களிடம் சேகரித்து முறையற்றவகையில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த கப்பல் பல தடங்கல்களுக்கு பின்னர் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவென கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. எனினும் உரிய தஸ்தாவேஜுகள் இல்லாமையாலும் பொருட்களுக்கான சுங்கவரியை செலுத்த முடியாமையாலும் அந் நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுக பொதியறையிலேயே மாதக்கணக்கில் கிடந்தன. தற்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இதற்கான வரிப்பணத்தில் 20 லட்ச ரூபாய்களை ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந் நடவடிக்கை மிகுந்த பாராட்டுக்குரியதெனவும், விரைவில் இவ் நிவாரணப் பொருட்கள் துறைமுகத்திலிருந்து வெளிக்கொணரப்பட்டு அகதிகளாக உள்ள மக்களுக்கு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக