16 அக்டோபர், 2009

வவுனியா அரச பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு அதிகரிப்பு : நோயாளர் அவதி


பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு அதிகரித்திருப்பதனால், நோயாளர்களும், நோயாளர்களைப் பார்க்கச் செல்பவர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்றவர்கள் பலர் அங்கிருந்து தப்பி வெளியில் செல்வதைத் தடுப்பதற்காகவே வைத்தியசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

வவுனியா மாவட்டம் தவிர்ந்த வேறு மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களே இவ்வாறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலைக்குள் சிகிச்சைக்காகச் செல்பவர்களும் சரி, நோயாளர்களைப் பார்ப்பதற்காக அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களும் நுழைவாயிலில் தமது தேசிய அடையாள அட்டையைக் கொடுத்து அதற்குரிய இலக்கத் துண்டு ஒன்றைப் பெற்றுச் செல்ல வேண்டும்.

இவ்வாறு செல்பவர்களை ஆங்காங்கே நடமாடுகின்ற அல்லது கடமையில் இருக்கின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடையாள அட்டைக்கான துண்டு இருக்கின்றதா எனக் கேட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கி்ன்றார்கள்.

இவர்கள் இவ்வாறு தடுத்து நிறுத்தி சோதனையிடுவதற்கான விசாரணைகளில் ஈடுபடுவதனால் நோயாளர்கள் கிளினிக்குக்கு அல்லது வைத்திய பிரிவுகளுக்குச் செல்வதில் தாமதமும், சிரமமும் ஏற்படுவதாகவும், நோயினால் வதைபடுபவர்கள் மேலும் அவஸ்தைக்கு உள்ளாக நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நோயாளர்களைப் பார்ப்பதற்காகக் காலை, மதியம், மாலை நேரங்களில் செல்பவர்களிடம் வார்டுகளுக்குச் செல்வதற்கான பாஸ் இருக்கின்றதா என்பதைப் பரிசீலனை செய்வதற்காகப் பொதுமக்களிடம் அதிகாரத் தோரணையில் மிரட்டி, ஏசுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்தத் தொல்லைகளைக் கடந்து நோயாளர்களைப் பார்வையிட்டு, அல்லது நோய்க்கான மருந்தினைப் பெற்றுக்கொண்டு, தமது தேசிய அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு, திரும்பும்போது நுழைவாயிலில் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறுபவர்களின் தேசிய அடையாள அட்டையைப் பரிசீலனை செய்யும் பொலிசார், அதில் பிறந்த இடம் வவுனியா என குறிப்பிடப்பட்டிருந்தால் எந்தவித கஷ்டமுமின்றி வெளியில் செல்ல அனுமதிக்கின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தைத் தவிர்ந்த வேறு மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தால் – குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் தற்போது தங்கியுள்ள இடத்தை உறுதிப்படுத்துவதற்கான வேறு உறுதியான ஆவணங்களைக் கோரி தடுத்து நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக