15 அக்டோபர், 2009

14.10.2009 தாயகக்குரல் 23

நடந்து முடிந்துள்ள தென் மாகாண சபை தேர்தலில் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 38 உறுப்பினர்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றியடைந்துள்ளது. புலிகளுக்கெதிரான இராணுவ வெற்றியையும், தென்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முன்வைத்து தேர்தலில் இறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்து வந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது 67 வீதமான வாக்குகளே.

இதை அரசாங்கத்துக்கு கிடைத்த தோல்வியாகவே எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளை விட 20ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் இந்த மாகாண சபைத் தேர்தலில் குறைவாகப் பெற்றுள்ளதாகவும் ஆகவே இது அரசுக்கு மக்களிடையே செல்வாக்கு குறைந்திருப்பதை காட்டுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 72ஆயிரத்து 379 வாக்குகளுடன் மூன்று உறுப்பினர்களைப் பெற்ற ஜே.வி.பி. கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மகாணசபைத் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரித்திருந்தது. அதன் மூலம் கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி. 14 உறுப்பினர்;களைப் பெற்றிருந்தது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை என்ன? கடந்த மாகாணசபையில் 19 உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது 14 உறுப்பினர்களை மாத்திரம் பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிமசிங்கா பெற்ற வாக்குளைவிட தென்மாகாண சபை தேர்தலில் சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது.. ஆனால் இந்த வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனதாகவும் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகள் குறைந்ததாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெற முடிந்ததே அல்லாமல் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மக்கள் ஆதரவு அரசுக்கு அதிகரித்துள்ளதாக கருதமுடியாது.

தென்மாகாண சபைதேர்தலில் 17 இலட்சத்து 61ஆயிரத்து 859 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் 12 இலட்சத்து 20 ஆயிரத்து 42 பேரே வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் 5 இலட்சத் 41ஆயிரத்து 817 பேர் வாக்களிக்கவில்லை.

92 வீதமான பெரும்பான்மை இன வாக்காளர்களைக் கொண்ட தென்மாகாண சபை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். அது மாத்திரமல்ல ஜனாதிபதியின் சொந்த மாவட்டமாகும். ஜனாதிபதி இந்த மாவட்டங்களில் பாரிய அபிவிருத்தி வேலைகளை மேற்கோண்டுள்ளார். அம்பாந்தோட்டையில் 360 மில்லியன் அமெரிக் டொலர் செலவில் சர்வதேச துறைமுகம் நிர்மாணிக்கப்படுகிறது.

தென் மாகாணத்தில் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுராட்சி சபைகளில் உள்ள உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் என பலர் அக்கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தப்போவதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டனர். இப்படிப்பட்ட பல சாதகமான சூழ்நிலைகள் அரசுக்கு இருந்த நிலையில் அவர்கள் பெற்ற இந்த வெற்றியை பெரிய வெற்றியாக கருதமுடியாது. இந்த வெற்றி ஜனாதிபதி தேர்தலுக்கு அனுகூலமாக அமையுமா என்ற சந்தேகம் பல மட்டங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே பாரிய தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகுமாறு ஜனாதிபதி அரசாங்க கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். பாரிய தேர்தல் ஜனாதிபதி தேர்தலா அல்லது பொது தேர்தலா என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பான முயற்சிகளில் எதிர்கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்து ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளையும் எதிர்கட்சிகள் மேற்கொள்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஜெனரல் சரத்பொன்சேகா எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

யுத்தத்;தை முன்னின்று நடத்தியவர் என்பதாலும் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் என்று அரசியல் அவதானிகள் அபிபிராயம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வடமாணம் தவிர்ந்த எட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு எட்டு மாகாண சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிக் கொண்டுள்ளது. இந்த எட்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில் 130 இலட்சத்து 13 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதிலும் 85 இலட்சத்து 47 ஆயிரம்பேர் மாத்திரமே வாக்களித்துள்ளர். சுமார் 44 இலட்சத்து 65ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. இது மக்களின் விரக்தி நிலையையே காட்டுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் வாக்காளர் தொகை அதிகரித்த நிலையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகள் அதிகரிக்காததையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியையும் கணக்கில் எடுத்தால் இரண்டு தேசியக் கட்சிகளிலுமே மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்பது தெரிகிறது.

இரண்டு கட்சிகளுமே இனப்பிரச்சினை தொடர்பாக நிலையான கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு யுத்த வெற்றிகளால் கிடைத்துள்ள மக்களின் ஆதரவு நிரந்தரமானதல்ல. யுத்தம் முடிந்துள்ள நிலையில் யுத்தத்தை மக்கள் மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர். யுத்த தளபாட கண்காட்சிகள் மூலம் நீண்ட காலத்துக்கு யுத்தத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவும் முடியாது.

இந்த நிலையில் அனைத்து மக்களின் ஆதரவையும் அரசாங்கம் பெறவேண்டுமானால் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதிலும் சிறுபான்மை மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்கவும் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக