28 அக்டோபர், 2009

28.10.2009 தாயகக்குரல் 25

இலங்கையில் முதலில் நடைபெறப் போகும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற யோசனைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறுவதானால் முதலில் நடைபெற வேண்டிய தேர்தல் 2010 ஏப்ரலில் பாராளுமன்றத் தேர்தலாகும்.

ஜனாதிபதி தேர்தல் 2011 பிற்பகுதியில் நடைபெறவேண்டும். ஆனால் யுத்தத்தில் புலிகளை அரசாங்கம் வெற்றிகொண்டதால் ஜனாதிபதியின் செல்வாக்கு உச்சமடைந்த நிலையில் 2010 ஜனவரியில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என்ற கருத்து மேலோங்கியிருந்தன. ஆனால் தென்மாகண சபைத் தேர்தலுக்குபின்னர் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடக்குமா அல்லது பொதுத் தேர்தல் முதலில் நடக்குமா என்ற சந்தேகங்களை செய்தி ஊடகங்கள் ஏழுப்பியிருந்தன. இந்த சந்தேகங்களுக்கு விடை 15ம் திகதி நடைபெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மகாநாட்டில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் 2010 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலையும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலையும் நடத்துவதையே விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால்; இரண்டு தேர்தல்களும் ஒரே தினத்தில் நடைபெறக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பாக ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன யாப்பா தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் பட்சத்தில் மிகவும் பலவீனப்பட்டுள்ள நிலையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியால் மகிந்த ராஜபக்ஷாவுக்கு பலமான போட்டியை ஏற்படுத்தமுடியாது. எனவேதான் எதிர்கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து அந்தக் கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் முயற்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில்தான் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது கூட்டுப்படை பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்கட்சி கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளிவந்தன. சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வருவாரா இல்லையா என்பது தெரியாத நிலையில், இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் வேலையை இராஜினாமா செய்தோ, ஓய்வு பெற்ற பின்னரோ தேர்தலில் போட்டியிடுவதை யாரும் தடுக்கமுடியாது எனவும் சரத் பொன்சேகா அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு பேராபத்து என்பதாலேயே அவர்மீது அரசாங்கம் அவதூறு கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரணில் தெரிவிக்கிறார். இராணுவத்தினரை முதல் தடவையாக தென்மாகாண சபைத்த தேர்தலில் போட்டியிட வைத்தது அரசாங்கமே எனவும் ரணில் தெரிவிக்கிறார். இன்னொரு பக்கம் புதிய ஹெல உறுமய கட்சி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறது. படையினருக்கு தலைமை தாங்கி யுத்தத்தில் வெற்றி பெற்ற இராணுவத் தளபதிக்கு நாட்டுக்கு தலைமைதாங்கி வழி நடத்த ஏன் முடியாது எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்கட்சி கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த செய்தி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு எதிர்கட்சிகளின் கூட்டணியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நீதியரசர் சரத் என்.டி.சில்வாவும் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் எந்தக்கட்சி சார்பில் யார் நிற்கிறார் என்பதல்ல பிரச்சினை. ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் மக்கள் பிரச்சினையில் என்ன தீர்வை முன்வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். எதிர்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அல்லது பொது வேட்பாளரை ஆதரிப்பதாக கூறும் கட்சிகளின் பொதுவான கோட்பாடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதுதான் .இந்தக் கூட்டணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணையப்போவதாகவும் செய்திகள் வெளி வந்தன. ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இனப்பிரச்சினை தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தக் கூட்டை ஆதரிக்கும் சில கட்சிகள் இனப்பிரச்சினையில் இனவாதப் போக்கை கொண்டவர்கள். இவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது திருத்தத்தை அமுல் படுத்தப்படுவதைக்கூட எதிர்ப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கக்கூடாது என கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தப்போகும் வேட்பாளரையே ஆதரிக்கப்போகிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாகியுள்ளது.
இதற்கிடையே தமிழ் முஸ்லிம் கட்சிகளிடையே ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றது.

இந்த கூட்டமைப்பு தேர்தலை நோக்கமாக கொண்டதல்ல என்றும் சிறுபான்மையினரின் பலத்தை எடுத்துக் காட்டுவதற்கும் இரு சமூகங்களினதும் உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொள்வதற்குமான கூட்டமைப்பாகவே இருக்கும் எனவும் தேர்தல் இரண்டாம் பட்சமே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தை ஜனநாயக வழிகளிலேயே மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான கூட்டமைப்பு ஏற்படுதல் அவசியமே. ஆனால் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்தால் மட்டும் போதாது. மக்களும் இணையவேண்டும். அப்போதுதான் தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக