28 அக்டோபர், 2009

கெப். கொலராடோ கப்பல் நிவாரணப்பொருள் விநியோகம் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வவுனியா அரசஅதிபர் சந்திப்பு-
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமென ஐ.தே.கட்சி தெரிவிப்பு-

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது இக்கூட்டமைப்பில் 04 பிரதான கட்சிகள் மற்றும் 20 அமைப்புகள் தம்முடன் கைகோர்த்து நிற்கின்றன. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதே இந்தப் பொதுக் கூட்டமைப்பின் பிரதான நோக்கமாகும். ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்புகளிலுள்ள உறுப்பினர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதுடன், அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தமும் கொண்டுவரப்படும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார்.


இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் இன்று வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கெப் கொலராடோ கப்பலின் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். கெப் கொலராடோ கப்பலின் 884தொன் நிவாரணப் பொருட்கள் இடம்பெயர்ந்தோர்க்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 31ம் திகதி கெப் கொலராடோ கப்பலில் இந்தப்பொருட்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் சில மாதங்களின் பின்னர் இப்பொருட்கள் கடந்த சனிக்கிழமையன்று துறைமுக அதிகாரசபையினால் விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து அவை வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்நிவாரணப் பொருட்களின் தர நிர்ணயம் தொடர்பில் இலங்கை தர நிர்ணய சபை இன்று அறிக்கை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக