29 ஆகஸ்ட், 2009

இராணுவ வெற்றியிலிருந்து சமாதானத்தை கொண்டு வருவது நாட்டு தலைவர்களின் கடமை-
இந்திய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்


மகத்தான இராணுவ வெற்றிகள் சமாதானத்தைக்கொண்டு வரவில்லை என்பதை வரலாறுகள் காண்பித்து நிற்கின்றன என இந்திய இராணுவத்தின் துணைத் தளபதியாக முன்னர் பதவி வகித்தவரும் தற்போது சென்னையைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையத்தின் தலைவராக திகழ்பவருமான ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வீ.ஆர். ராகவன் தெரிவித்தார்.

இராணுவத்தினர் ஈட்டியுள்ள மகத்தான வெற்றியிலிருந்து நீண்ட காலமாக நாடி நிற்கின்ற சமாதானத்தை கொண்டு வருவது நாட்டுத் தலைவர்களதும் பிரஜைகளதும் வகிபாகமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். கொழும்பில் நேற்று ஆரம்பமான, "யுத்தத்தில் வெற்றியீட்டியதிலிருந்து சமாதானத்தை வெற்றி கொள்வது; இலங்கைச் சமூகத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீளக் கட்டியெழுப்புதல்' என்ற தொனிப் பொருளிலான இருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆரம்ப உரையை ஆற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கினை உபாயக் கற்கைகளுக்கான பிராந்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிரதம அதிதியாக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர்கள், கல்விமான்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வீ.ஆர். ராகவன் இலங்கையின் இராணுவ வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையில், ஆயுத மோதல்களின் நிறைவானது மனிதப் பாதுகாப்பை உறுதி செய்யும் நீண்ட பயணத்தினை ஆரம்பித்து வைத்துள்ளது. இராணுவ வெற்றியினால் நாடு பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம். உங்கள் நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக உணரலாம். உங்களது பிரஜைகளும் பாதுகாப்பாக இருப்பது இன்றியமையாதது. புகழ்பெற்ற இராணுவ சிந்தனையாளரான கார்ல் வொன் க்ளோஸ்விற் ""யுத்தத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்'' என்பது குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

மோதல்களின் நோக்கம் வெற்றி எனக் கூறுவோமானால் அது குறுகிய பார்வை கொண்ட ஒரு கூற்றாகவே அமைந்து விடும். மாறாக யுத்தங்களதும் மோதல்களதும் நோக்கமானது வெறுமனே வெற்றியை மாத்திரமின்றி சமாதானத்தைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எம் மத்தியில் பல உதாரணங்கள் உள்ளன. மத்திய கிழக்கில் அரபு, இஸ்ரேல் மற்றும் பல உதாரணங்கள் உள்ளன. அங்கெல்லாம் சிறப்பான இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டன.

ஆனால், அவை சமாதானத்தைக் கொண்டு வரவில்லை. சிறப்பான இராணுவ நடவடிக்கையில் வெற்றியீட்டியதன் மூலமாக வரலாற்றில் இலங்கை நாடு வரலாற்றுமுக்கியத்துவமிக்க உச்சத் தருணத்தில் உள்ளது. இலங்கை இராணுவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இருந்து நாம் மிகுந்த வியப்புணர்வுடன் அவதானித்து வந்தோம். 20 வருட காலப் பகுதியில் இராணுவத்தினர் எப்படியான நிலையில் இருந்து இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளனர். எப்போதுமே போராடுவதற்கு தயாரான குணாம்சம் கொண்ட இளமையான நவீனகரமான இராணுவமாக மோதலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை கொண்ட இராணுவமாக அவர்கள் மாற்றம் பெற்றுள்ளனர். ஆயுதப் படையினர் சிறப்பான பணியைச் செய்து முடித்துள்ளனர். அந்த வெற்றியிலிருந்து நாம் அனைவருமே நீண்ட காலமாக நாடி நிற்கின்ற சமாதானத்தை கொண்டு வருவது நாட்டுத் தலைவர்களதும் பிரஜைகளதும் தற்போதைய வகிபாகமாக இருக்க வேண்டும். அதனை எவ்வாறு நாம் சாதிக்கப் போகின்றோம் என்பது எமக்கு முன்பாகவுள்ள கேள்வியாகவுள்ளது.

உச்சக் கட்டப் பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பே

உச்சக் கட்டப் பாதுகாப்பு என்பது நாட்டின் பிரஜைகளது பாதுகாப்பே! தற்போது இந்தியாவிலும்கூட தேர்லலொன்றுக்கு முன்பாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியாக கருத்துக் கணிப்புகளை நடத்துபவர்களிடம் மக்களுக்கு மிகுந்த கரிசனைக்குரிய விடயங்கள் யாது? அவர்கள் உள்ளடக்கும் பத்து விடயங்களில் ஒன்றாக தேசியப் பாதுகாப்பு என்கிற விடயத்தையும் உள்ளடக்கும் படியாக நாம் கேட்டிருந்தோம். அப்படியாக கருத்துக் கணி ப்புகள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தடவையிலும் இந்தியப் பிரஜைகள் தமது கரிசனைக்குரிய விடயங்களடங்கிய பட்டியலில் தேசியப் பாதுகாப்பு என்பதை மிகவும் கடைசி நிலையிலேயே குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு அவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில் லை என்பது அர்த்தமாகாது. அவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தியா பலமிக்கதாகவுள்ளது. எமது நாட்டை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. எமது நாட்டின் பாகங்களை நாம் இழக்கப் போவதில்லை. எம்மிடம் மிகச் சிறந்த ஆயுதப் படையினர் உள்ளனர் என்பது தொடர்பில் இந்தியப் பிரஜைகள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு என்பது இராணுவ பலமல்ல.

அவர்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு என்பது சட்டம், ஒழுங்கு, ஊழல், மோசடியற்ற தன்மை, கல்வி, சுகாதாரம் அவர்களது சிறார்களின் எதிர்காலம், தொழில் வாய்ப்பு என்பவையே பாதுகாப்பு. அவை இல்லையென்றால் தாம் பாதுகாப்பாக இல்லை என்பதே அவர்களது உணர்வாகவுள்ளது. அது உங்களைப் பொறுத்தவரையிலும் பொருந்தக் கூடிய உண்மையாகும். என்னைப் பொறுத்த வரையும் உண்மையாகும். அதனால் தான் சமாதானம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். இலங்கையில் இந்த மகத்தான வரலாற்று முக்கியத்துவமிக்க இராணுவ வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் எப்படிப் பயணிக்கப் போகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக