"தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்" -இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கிறது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின், வழக்குத்தொடரவோ அல்லது சாட்சிகள் இல்லாதபட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத்திட்டத்தை நீதியமைச்சின் செயலாளருடன் சேர்ந்து தயாரிக்குமாறும் சட்டமா அதிபருக்கான உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளோவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஜே. ஏ. பிரான்ஸிஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு இன்று எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதியற்ற செயல் என்று பிரதம நீதியரசர் அசோக என். டி . சில்வா தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக