31 ஆகஸ்ட், 2009

ஆதரவற்ற சிறுவர் நலன் குறித்து மனித உரிமைக்குழு கலந்துரையாடல்வவுனியா மெனிக்பாம் முகாம்கள் சிலவற்றில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஆதரவற்ற சிறுவர்களின் எதிர்கால நலன்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் 2 ஆம் திகதி புதன்கிழமை கலந்துரையாடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியைச் சேர்ந்த தர்மபுரம் முகாமில் 35 சிறுவர்களும், சுமதிபுரம் முகாமில் 26 சிறுவர்களும், வீரபுரம் முகாமில் 13 சிறுவர்களும் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இவர்களின் முறையான பராமரிப்பு, இவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், எதிர்கால நன்மைகள் என்பன குறித்து சம்பந்தப்பட்ட முகாம்களின் பொறுப்பதிகாரிகள், மற்றும் அந்தந்த முகாம்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த முகாம்களில் சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அவர்களது பெற்றோர் - உற்றார்கள் இருக்கின்றார்களா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியாது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுவர்களை உரிய இடங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு இந்தக் கலந்துரையாடல் வழிசமைக்கும்" என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பதிகாரி பிரியதர்சன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக